மட்டு. மாவட்டம் சிவப்பு வலயமாக அடையாளம்; மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும்

- பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மயூரன் எச்சரிக்கை

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பிரதேசத்தில் மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட வேண்டுமென பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக செவ்வாய்க்கிழமை (18) பிராந்திய சுகாதார சேவை பணிமனையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் மயூரன் தெரிவித்தார்.

கல்லடி வேலூர், சின்ன ஊறணி, திருச்செந்தூர் ஆகிய மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளே இவ்வாறு முடக்கப்படவுள்ளன.

மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் இரு கர்ப்பிணித் தாய்மார்கள் ஒரு சுகாதார உத்தியோகத்தர் உட்பட 66 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

அதில் அதிகபட்சமாக மட்டக்களப்பு சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 32 பேரும் ,காத்தான்குடி சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 8 பேரும், கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 6 பேரும், களுவாஞ்சிகுடி சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 5 பேரும், செங்கலடி சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 4 பேரும், வாழைச்சேனை, ஆரையம்பதி சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகளில் தலா 3 பேரும், ஏறாவூர் சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 2 பேரும், வெல்லாவெளி, கிரான் சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகளில் தலா ஒருவருமாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் இதுவரை 1516 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில், மூன்றாவது அலையில் இதுவரை 533 கொவிட் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதே வேளை கடந்த மாதத்தில் தொற்றுக்குள்ளானவர்களது எண்ணிக்கை 165 ஆக இருந்த போதிலும் கடந்த ஒரு வார காலத்தில் 250 பேர் கொவிட் தொற்றாளர்களாக இனங் காணப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் தற்போது சிவப்பு வலயமாக காணப்படுவதனால் பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டுமெனவும், சுகாதார நடைமுறைகளைப் பேணுவதுடன், அநாவசியமாக வீட்டை விட்டு வெளியே வரவேண்டாமெனவும், கைகளை அடிக்கடி கழுவிக் கொள்ளவேண்டும் என்றும் சமூக இடைவெளியை பேணுவதுடன், முக கவசங்களை ஒழுங்கான முறையில் அணிந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.

(கல்லடி குறூப் , புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்கள்)

Wed, 05/19/2021 - 16:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை