"வெப்ப ஈரப்பதமூட்டப்பட்ட ஒட்சிசன் சிகிச்சை பிரிவு"

விமானப்படை தயாரிப்பு; ஜனாதிபதியிடம் கையளிப்பு

சுவாசக் கோளாறுள்ள நோயாளிகளின் பயன்பாட்டுக்காக விமானப்படையினரால் தயாரிக்கப்பட்ட வெப்ப ஈரப்பதமூட்டப்பட்ட ஒட்சிசன் சிகிச்சை பிரிவு (HEATED HUMIDIFIED OXYGEN THERAPY) ஜனாதிபதி அலுவலகத்தில் (12) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

கொவிட் 19 தொற்றுநோய் நிலைமைகளுக்கு மத்தியில் ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில், புத்தாக்கத் துறையில் சர்வதேச தூதுவரான வித்யாஜோதி, கலாநிதி பந்துல விஜேவின் எண்ணக்கருவில் பேராசிரியர் ரணில் டி சில்வா மற்றும் வைத்தியர் திலங்க ரத்னபால உள்ளிட்ட முன்னணி மருத்துவ நிபுணர்கள் குழுவின் பங்களிப்புடன் இந்த உபகரணத் தொகுதி தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த சாதனம் சுவாசக் கோளாறுள்ள நோயாளிகளுக்கு அதிகளவு கட்டுப்படுத்தப்பட்ட வெப்பநிலை ஒட்சிசனை முழு ஈரப்பதத்தில் வழங்குகிறது.

விமானப்படை தளபதி ஏயார் மார்ஷல் சுதர்ஷன பதிரனவின் வழிகாட்டலின் பேரில், விமானப்படை கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் பிரசன்ன மார்டினோவின் மேற்பார்வையில் விமானப்படையின் பொறியியல் பிரிவின் விமான பராமரிப்பு பிரிவினால் தயாரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. வரையறைகள், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் செயல்திறன் தரங்களை சரிபார்த்த பிறகு, இது இலங்கை தேசிய ஔடத ஒழுங்குபடுத்தல் அதிகார சபையிடம் சமர்ப்பிக்கப்பட்டதுடன், மொரட்டுவை பல்கலைக்கழகம் இதன் மின் பாதுகாப்பு தரங்களின் இணக்கப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த சாதனத்தை உற்பத்தி செய்வதற்காக 15 இலட்சம் ரூபா செலவாகுமென்று மதிப்பிடப்பட்டிருந்தாலும், 3,00,000 இலட்சம் ரூபா என்ற குறைந்த செலவில் உற்பத்தி நடவடிக்கைகள் நிறைவுபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தற்போது, 50 உபகரண தொகுதிகளை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதுடன், சுகாதாரத் துறையின் தேவைக்கேற்ப தொடர்ச்சியாக உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இந்த சாதனத்தின் செயற்பாடு பற்றி ஜனாதிபதிக்கு விளக்கமளிக்கப்பட்டது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் (ஓய்வு பெற்ற) ஜெனரல் கமல் குணரட்ண, சுகாதார அமைச்சின் செயலாளர் சஞ்சீவ முனசிங்க மற்றும் விமானப்படை தளபதி ஏயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரண ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

Fri, 05/14/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை