அமெரிக்கப் படையினர் ஆப்கானில் இருந்து வெளியேறும் பணி ஆரம்பம்

அமெரிக்காவின் நீண்ட போரை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க துருப்புகளை உத்தியோகபூர்வமாக வாபஸ் பெறும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க மற்றும் நேட்டோ துருப்புகள் கிட்டத்தட்ட கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானில் நிலைகொண்டுள்ளன.

எனினும் படைகள் வாபஸ் பெறப்படும் நடவடிக்கை வரும் செப்டெம்பர் 11 ஆம் திகதி வரை நீடிக்கவிருப்பதோடு, ஆப்கானில் வன்முறைகள் அதிகரித்திருக்கும் சூழலிலேயே அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தாக்குதல் சம்பவங்களால் ஆப்கான் துருப்புகள் உசார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

சர்வதேச படைகளை இலக்கு வைக்காமல் இருப்பது பற்றிய உடன்படிக்கையை பின்பற்ற வேண்டிய கடப்பாடு தொடர்ந்து இல்லை என்று தலிபான்கள் எச்சரித்துள்ளனர்.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் தலிபான்களுக்கு இடையே கடந்த ஆண்டு எட்டபட்ட உடன்படிக்கையின்படி, வெளிநாட்டு படைகள் இந்த மே முதலாம் திகதி வாபஸ் பெற வேண்டும் என்றும், வெளிநாட்டு படைகள் மீதான தாக்குதல்களை தலிபான்கள் நிறுத்துவதாகவும் கூறப்பட்டிருந்தது.

இந்தக் காலப்பகுதியில் போட்டி இஸ்லாமியவாத குழுக்களில் இருந்து வெளிநாட்டு இராணுவத் தளங்களை தலிபான்கள் பாதுகாத்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். எனினும் ஆப்கான் துருப்புகள் மற்றும் பொதுமக்கள் மீதான தலிபான்களின் தாக்குதல்களை இந்த ஒப்பந்தம் நிறுத்தவில்லை.

தமது படைகள் வாபஸ் பெறுவது ஆரம்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் தம் மீதான தக்குதல்கள் குறித்து அமெரிக்க இராணுவ ஜெனரல் ஸ்கொட் மில்லர் எச்சரித்துள்ளார்.

‘ஆப்கான் பாதுகாப்பு படைகளுக்கு உதவும் கூட்டுப்படை மற்றும் இராணுவத்திற்கு எதிராக எந்த ஒரு வகையான தாக்குதலுக்கும் கடுமையான இராணுவ பதிலடி கொடுக்கப்படும் என்பதில் எந்தத் தவறுக்கும் இடமில்லை’ என்று அவர் ட்விட்டரில் எச்சரித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், மே 1ஆம் திகதி படைகள் வாபஸ் பெறும் கால எல்லையை பிற்போட்டதோடு துருப்புகள் சிலர் செப்டெம்பர் 11 ஆம் திகதி வரை நிலைநிறுத்தப்படுவார்கள் என்று அறிவித்தார். செப்டெம்பர் 11 தாக்குதல் இடம்பெற்று 20 ஆண்டு பூர்த்தி தினமும் அன்றைய தினத்தில் இடம்பெறவுள்ளது.

‘இந்த விதி மீறல் ஆக்கிரமிப்பு படைக்கு எதிராக எந்த பதில் நடவடிக்கைக்கும் வித்திட்டுள்ளது’ என்று தலிபான் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தாக்குதலை தீவிரப்படுத்துவதற்கு முன்னர் தலைவர்களின் உத்தரவுக்காக தலிபான் போராளிகள் காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் அமெரிக்கா தனது படைகளை வாபஸ் பெறுவதற்காக காலக்கெடு ஒன்றை முன்வைத்திருப்பதால் வெளிநாட்டு படைகள் மீதான தாக்குதல்கள் பெரும்பாலும் தவிர்க்கப்படலாம் என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

மறுபுறம் அமெரிக்கா, ஆப்கானில் இருந்து இதனது தளபாடங்களை எடுத்துச் செல்லும் சவாலுக்கு முகம்கொடுத்துள்ளது. தாம் எடுத்துச் செல்லும் பொருட்கள் மற்றும் ஆப்கான் சந்தையில் விற்க வேண்டிய பொருட்கள் பற்றி அமெரிக்கா முடிவெடுக்க வேண்டி இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

Mon, 05/03/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை