உலக சுகாதார அமைப்பு அனுமதி

சீன அரசுக்கு சொந்தமான சீனோபார்ம் நிறுவனம் தயாரித்த கொவிட்-19 தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அவசரகாலப் பயன்பாட்டு அனுமதி வழங்கியுள்ளது.

மேற்கத்திய நாடு ஒன்றால் தயாரிக்கப்படாத தடுப்பூசி ஒன்று உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரத்தை பெறுவது இதுவே முதல் முறையாகும். சீனாவிலும் வேறு சில உலக நாடுகளிலும் இந்த தடுப்பூசி ஏற்கனவே கோடிக்கணக்கான மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக பைசர், அஸ்ட்ராசெனிக்கா, ஜோன்சன் அன்ட் ஜோன்சன் மற்றும் மொடர்னா ஆகிய தடுப்பூசிகளின் பயன்பாட்டுக்கு மட்டுமே உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்திருந்தது.

ஆனால் பல நாடுகளில், குறிப்பாக ஆபிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, ஆசியா போன்ற பகுதிகளில் உள்ள சில ஏழை நாடுகளில் மருத்துவ ஒழுங்காற்று அமைப்புகள் சீனோபார்ம் தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கியிருந்தன.

முன்னதாக குறைவான தரவுகளே சர்வதேச அளவில் வழங்கப்பட்டு இருந்ததால் சீன தடுப்பூசியின் செயல்வீரியம் நீண்டகாலமாக உறுதியாகத் தெரியாமலே இருந்தது.

சீனோபார்ம் நிறுவனம் தயாரித்த தடுப்பூசியின் பாதுகாப்பு, செயல்வீரியம் மற்றும் தரம் ஆகியவற்றை தாங்கள் பரிசோதித்து கண்டறிந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

18 அல்லது அதற்கு அதிகமான வயதுடையவர்களுக்கு இந்த தடுப்பூசியை இரண்டு டோஸ்களாக வழங்கவும் உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளது.

Mon, 05/10/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை