நேபாளத்தில் கொரோனா தொற்று பாதிப்பு உச்சம்

நேபாளத்தில் கொரோனா தொற்று சம்பவங்கள் அதிகரித்து மருத்துவமனைகள் நிரம்பி வழியும் நிலையில் அந்நாட்டு பிரதமர் பிற நாடுகளிடம் உதவி கோரியுள்ளார்.

நேபாளத்தில் தற்போது தினசரி 100,000 பேரில் 20 பேருக்கு நோய்த் தொற்று அடையாளம் காணப்படுகிறது. இது இரண்டு வாரங்களுக்கு முன் இந்தியாவில் பதிவான எண்ணிக்கைக்கு சமனாகும்.

கடந்த வார இறுதியில் செய்யப்பட்ட வைரஸ் தொற்று சோதனையில் 44 வீதமானவர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக நேபாள அரசு தெரிவித்துள்ளது.

வரவிருக்கும் நெருக்கடி நிலை குறித்து சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் செம்பிறை சமூகம் எச்சரிக்கை விடுத்துள்ளன. ‘இந்தியாவில் தற்போது இடம்பெறும் பயங்கரம் நேபாள எதிர்காலத்தின் முன்னோட்டமாக உள்ளது. தற்போதைய கொரோனா பரவலை கட்டுப்படுத்தாவிட்டால் அதிக உயிர்களை இழக்க நேரிடும்’ என்று நேபாள செஞ்சிலுவை சங்க தலைவர் டொக்டர் நெட்ரா பிரசாத் டிம்சினா தெரிவித்துள்ளார். பலவீனமான சுகாதார கட்டமைப்பு கொண்ட நோபாளம் இந்தியாவை விடவும் குறைந்த மருத்துவர்கள் உள்ள நாடாக இருப்பதோடு அங்கு தடுப்பூசி வழங்கப்பட்ட எண்ணிக்கையும் குறைவாக காணப்படுகிறது.

இந்நிலையில் நோயை கட்டுப்படுத்த எல்லைகளில் கட்டுப்பாடுகள் இறுக்கப்பட்டு தலைநகர் உட்பட மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் முடக்கநிலை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் எவரெஸ்ட் சிகரத்தில் உள்ள முகாம்களிலும் நோய்த் தொற்று பரவி இருக்கும் சூழலில் இந்தக் கட்டுப்பாடுகள் போதுமாக இல்லை என்று விமர்சனங்களும் எழுந்துள்ளன.

Fri, 05/07/2021 - 14:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை