மருதமுனை கடற்கரை பகுதிக்கு பொதுமக்கள் வர தற்காலிக தடை

- மருதமுனை கொரோனா தடுப்புச் செயலணி தீர்மானம்

நேற்று  10ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரும் வரை மருதமுனை பிரதேச கடற்கரைப் பகுதிக்கு உள்ளுர் மற்றும்  வெளியூர் பொதுமக்கள் வருவது தடைசெய்யப்பட்டுள்ளதாக மருதமுனை கொரோனா தடுப்புச் செயலணி அறிவித்துள்ளது.நாட்டில் தீவிரமாகப் பரவிவரும் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி  டொக்டர் ஏ.ஆர்.எம்.அஸ்மி தலைமையில் சனிக்கிழமை (08)  நடைபெற்ற விஷேட கலந்துரையாடலின் போதே  இத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

இக் கலந்துரையாடலில் கல்முனை பிரதேச  செயலாளர் ஜே.லியாகத் அலி, கல்முனை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர்  ஏ.எல்.ஏ.வாஹிட், மருதமுனை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.ஹ_சைனுதீன் றியாழி, மருதமுனை தாறுல்ஹுதா மகளிர் அறபுக் கல்லுரியின் பணிப்பாளர் கலாநிதி அஷ்ஷெய்க் எம்.எல்.முபாறக் மதனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இங்கு ஏகமனதாக மேலும் பின்வரும் தீர்மானங்களும் எடுக்கப்பட்டன. தொழில் நிமித்தம்  வெளி இடங்களுக்குச்  சென்று ஊர் திரும்புகின்றவர்கள் தங்களின் வருகையை தங்கள் பிரிவு கிராம உத்தியோகத்தர் அல்லது பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஆகியோரிடம் அறிவிக்க வேண்டும், வெளி இடங்களில் இருந்து மருதமுனை கடற்கரைக்கு வருகின்றவர்களைக் கட்டுப்படுத்தல்,வர்த்தக நிலையங்களுக்கு வருகின்ற பொது மக்களை மட்டுப்படுத்தல், கடற்கரைப் பிரதேசத்தில் புதிதாக கடைகள் வைப்பதை தடைசெய்தல், தேவையற்ற வகையில் வீதிகளில் சுற்றித்திரிகின்ற இளைஞர்களை கட்டுப்படுத்தல்.  

மேலும் அயல் கிராமங்களில் இருந்து மருதமுனை கடற்கரைக்கு வருகின்றவர்களின் வருகையைத் தவிர்த்துக் கொள்வதற்கான அறிவுறுத்தல்களை அந்தந்த கிராம பள்ளிவாசல்கள் ஊடாகத் தெரியப்படுத்துதல் ,இவற்றை மீறிச் செயற்படுபவர்களுக்கு எதிராக பொலிஸார் மூலம் சட்ட நடவடிக்கை எடுத்தல் பொன்ற தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.

(மருதமுனை தினகரன் நிருபர்)

Tue, 05/11/2021 - 09:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை