இஸ்ரேல் மீதான ரொக்கெட் வீச்சுக்கு இடையே காசா மீது தொடர்ந்து உக்கிர வான் தாக்குதல்

69 பலஸ்தீனர் பலி: எல்லையில் படை குவிப்பு

காசாவில் நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்திற்கு மத்தியில் இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்றும் உயர்ந்த கட்டடங்கள் மற்றும் ஏனைய இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதோடு காசாவில் இருந்து இஸ்ரேலை நோக்கி ரொக்கெட் குண்டுகள் விசப்பட்டு வருகின்றன. கடந்த திங்கட்கிழமை இஸ்ரேலின் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் 17 சிறுவர்கள் உட்பட 69 பேர் உயிரிழந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதில் 390க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

மறுபுறம் ஏழு இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் காசா எல்லையில் ரோந்து சென்ற இஸ்ரேல் படை வீரர் ஒருவர் இரு சிறுவர்கள் மற்றும் ஒரு இந்திய பணியாளர் உட்பட ஆறு பொதுமக்கள் உள்ளனர். இஸ்ரேலின் பல்வேறு இடங்களை நோக்கியும் நூற்றுக்கணக்கான ரொக்கெட் குண்டுகள் பாய்ந்ததாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

இதனையொட்டி இஸ்ரேலுக்குள் பல நகரங்களிலும் யூத இஸ்ரேலியர்கள் மற்றும் பலஸ்தீன பிரஜைகளுக்கு இடையே வன்முறை வெடித்துள்ளது. இதன்போது வாகனங்கள் மற்றும் கட்டடங்கள் மீது தீவைப்பு சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு இரு தரப்பினரும் வீதிகளில் சண்டையிட்டு வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த மோதல்களில் 374 பேர் கைது செய்யப்பட்டிருப்பதோடு 36 அதிகாரிகள் காயமடைந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நகரங்களில் சட்ட ஒழுங்கை காக்க பொலிஸாருக்கு உதவியாக இராணுவத்தை அனுப்பப்போவதாக இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

‘அரபு குண்டர்கள் யூதர்களை தாக்குவதையும் யூத குண்டர்கள் அரபியரை தாக்குவதையும் நியாயப்படுத்த முடியாது’ என்று நெதன்யாகு தெரிவித்தார்.

கடந்த புதன்கிழமை இரவிலும் டெல் அவிவ் நகரில் ரொக்கெட் குண்டுகள் விழுந்த வண்ணம் இருந்ததால் தொடர்ந்து சைரன் ஒலி எழுப்பப்பட்டுக் கொண்டிருந்ததோடு மக்கள் பாதுகாப்பான இடங்களில் அடைக்கலம் பெற்றனர். இஸ்ரேலிய வான் பாதுகாப்பு அமைப்பான அயர்ன் டோம் வானில் அந்த ரொக்கெட்டுகளை சுட்டு வீழ்த்தும் சத்தங்களும் அந்த நகரில் கேட்ட வண்ணம் இருந்தது.

கடந்த திங்கட்கிழமை மோதல் ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் இதுவரை காசாவில் இருந்து சுமார் 1,500 ரொக்கெட் குண்டுகள் இஸ்ரேலை நோக்கி வீசப்பட்டிருப்பதாக இஸ்ரேலிய பாதுகாப்பு படை நேற்று தெரிவித்தது.

தொடர்ந்து நேற்று அதிகாலையில் முற்றுகையில் உள்ள காசா மீதான வான் தாக்குதல்களை இஸ்ரேல் மீண்டும் ஆரம்பித்தது. இவ்வாறான தாக்குதல் ஒன்றில் காசா நகரின் மத்தியில் உள்ள ஆறு மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் தரைமட்டமாக்கப்பட்டது. பதற்றம் அதிகரித்திருக்கும் சூழலில் காசா எல்லையில் இஸ்ரேலிய தரைப்படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக இஸ்ரேலிய இராணுவம் நேற்று தெரிவித்தது. தரைவழி நடவடிக்கை ஒன்றுக்கு பல கட்டங்களில் தயாராகி வருவதாகவும் அது தெரிவித்தது. இதற்கு முன்னர் 2014 மற்றும் 2008–2009 போர்களின்போது இஸ்ரேலிய துருப்புகள் காசாவுக்கு ஊடுருவி இருந்தது.

‘அந்த ஏற்பாடுகள் பற்றி இராணுவ தளபதி கண்காணித்து வருவதோடு வழிகாட்டல்களையும் வழங்கி வருகிறார்... அந்த நிலைமை மற்றும் நடவடிக்கைகளுக்கு தம்மை தயார்படுத்திய மூன்று படையணிகள் மற்றும் பிரிவுத் தலைமையகங்கள் காசா எல்லையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன’ என்று இஸ்ரேல் இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த புதனன்று காலை உயிரிழந்த பலரும் விச வாயுவை உள்ளிழுத்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாக காசா சுகாதார நிர்வாகம் தெரிவித்துள்ளது. மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும் இறுதி முடிவு இன்னும் வெளியாகவில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வன்முறைகள் கட்டுப்பாட்டை இழந்து பரவி வரும் நிலையில், இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அமெரிக்கா தனது தூதுவரான ஹாடி ஆம்ரை மத்திய கிழக்கிற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. மத்திய கிழக்கில் மூண்டுள்ள புதிய வன்செயலை முடிவுக்குக் கொண்டுவரும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக, வெள்ளை மாளிகை தெரிவித்தது. பலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கத்தின் மீது அதிகச் செல்வாக்குமிக்க எகிப்து, கட்டார் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய இராஜதந்திர வழிகளில், அமைதிக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக வொஷிங்டன் குறிப்பிட்டது.

‘விரைவாகவோ தாமதித்தோ இது முடிவுக்கு வரும் என்பது எனது எதிர்பார்ப்பு. ஆனால் தம்மை தற்காத்துக்கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உள்ளது’ என்று இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் பேசிய பின் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்தார். தாம் இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டதற்கான காரணத்தை பைடன் விளக்க தவறினார்.

‘காசா பகுதியில் செயற்படும் ஹமாஸ் மற்றும் ஏனைய பயங்கரவாதக் குழுக்களின் படைத் திறனுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல் நடத்துவோம்’ என்று அமெரிக்க ஜனாதிபதியிடன் தெரிவித்ததாக நெதன்யாகு அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

காசாவில் உயர்ந்த கட்டடங்கள் மற்றும் வங்கி ஒன்றின் மீது கடந்த புதனன்று தாக்குதல் நடத்திய இஸ்ரேல் ஹமாஸின் மூத்த தளபதி ஒருவரை கொன்றது.

‘எதிரியுடனான போர் முடிவற்ற ஒன்றாக மாறியுள்ளது’ என்று ஹமாஸ் தலைவர் இஸ்மைல் ஹனியேஹ் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலை குறித்து கடும் கவலை அடைந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார். நிலைமை குறித்து பேச்சுவார்த்தை நடத்த பாதுகாப்புச் சபை கூடியபோதும் இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் ஹமாஸ் பேச்சாளர் ஒருவரை மேற்கோள்காட்டி ரஷ்ய வெளியுறவு அமைச்சு வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்றில், ‘கிழக்கு ஜெரூசலத்தில் இஸ்ரேலின் வன்முறைகள் மற்றும் அங்குள்ள அரபு மக்கள் மீதான சட்டவிரோத நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டால் போர் நிறுத்தத்திற்கு தயார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கிழக்கு ஜெரூசலத்தின் அல் அக்ஸா வளாகத்தில் இஸ்ரேல் பொலிஸார் மற்றும் பலஸ்தீனர்களுக்கு இடையே பல நாட்கள் நீடித்த மோதலின் தொடர்ச்சியாகவே தற்போதைய வன்முறை வெடித்தது.

அல் அக்ஸா வளாகத்தில் இருந்தும் அருகாமையில் யூதக் குடியேற்றவாசிகளால் பலஸ்தீன குடும்பங்கள் அவர்களின் வீடுகளில் இருந்து வெளியேற்ற முயற்சிக்கும் செய்க் ஜர்ராஹ் பகுதியில் இருந்து இஸ்ரேலிய போலிஸாரை வெளியேறும்படி ஹமாஸ் கெடு விதித்தது. அந்த கெடு முடிந்த நிலையிலேயே இஸ்ரேல் மீதான ரொக்கெட் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது.

Fri, 05/14/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை