கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுச் சட்டம்; உயர் நீதிமன்ற சிபாரிசுகளை ஏற்றே சட்டமூலம் நிறைவேற்றப்படும்

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுச் சட்டம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் அனைத்து சிபாரிசுகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டே சட்டமூலம் நிறைவேற்றப்படுமென துறைமுக அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுச் சட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியாகவிருந்த காலத்தில் ஆரம்பித்திருந்த அபிவிருத்தித் திட்டங்களின் பிரதிபலனாக தான் இன்று கொழும்பு துறைமுக நகரம் உருவாகியுள்ளது.

கொழும்பு துறைமுக நகர திட்டத்திற்காக சீனாவுக்கு சொந்தமான நிறுவனமொன்று 1.4 பில்லியன் டொலர்களை செலவிடுகிறது. ஆனால் எமது நாட்டின் நிதியில் ஒரு ரூபாவையேனும் இதற்கான செலவிடவில்லை. 1.4 பில்லியன் அமெரிக்க டொலர் எமது நாட்டுக்கே கிடைக்கப்பெற்றுள்ளது. போர்ட்சிட்டியை உருவாக்குவதற்காக மணல் முதல் ஏனைய மூலபொருட்கள் இங்கிருந்தே பெற்றுக்கொள்ளப்பட்டன. எமது நாட்டின் பொருளாதாரத்துக்கு ஒரு வலு சேர்த்துள்ளது. இந்த 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்.

20ஆவது திருத்தச்சட்டத்திற்கு மேலதிகமாக 07 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன. என்றாலும் நாம் உயர்நீதிமன்றத்திற்கு மதிப்பளிக்கிறோம். அதனால் அவற்றை ஏற்றுக்கொள்கிறோம். இதேவேளை, கொவிட்19 காரணமாக உலக பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது.

எமது நாட்டில் ஏற்றுமதி பொருளாதாரம் முற்றாக வீழ்ந்துள்ளது. புதிய பொருளாதார நோக்குடன் பொருளாதார கதவுகளை திறக்க வேண்டியுள்ளது. அதன் ஒரு திருப்புமுனையாக கொழும்பு துறைமுக நகரம் அமையும். அடுத்த 05 வருடங்களில் 15 பில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடாக வருமென எதிர்பார்க்கிறோம் என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Thu, 05/20/2021 - 13:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை