காசா பகுதி மீது இஸ்ரேல் தொடர்ந்து வான் தாக்குதல்: மோதல்கள் உக்கிரம்

அமைதி காக்க சர்வதேச நாடுகள் அழுத்தம்

காசா மீது இஸ்ரேல் நேற்று அதிகாலையிலும் சரமாரி வான் தாக்குதல்களை நடத்தி இருப்பதோடு, ஹமாஸ் மற்றும் ஏனைய போராட்டக் குழுக்கள் காசாவில் இருந்து இஸ்ரேல் மீது தொடர்ந்து ரொக்கெட் குண்டு மழை பொழிந்துள்ளன. ஜெரூசலத்தில் கடந்த பல வாரங்களாக நீடிக்கும் தொடர்ச்சியான பதற்ற சூழலைத் தொடர்ந்தே மோதல் உக்கிரமடைந்துள்ளது.

இஸ்ரேல் வீசிய குண்டுகளாக முற்றுகையில் உள்ள காசாவில் கட்டடங்கள் அதிர்ந்ததோடு ரொக்கெட் குண்டுவீச்சு காரணமாக தெற்கு இஸ்ரேலிய நகரங்களில் சைரன் ஒரு எழுப்பப்பட்ட நிலையில் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர்.

காசாவில் 130 இராணுவ இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் அந்த தாக்குதல்களில் ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் போராளிகள் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்தது.

இஸ்ஸதீன் அல் - கஸ்ஸாம் படைப்பிரிவின் தளபதி முகமது அப்துல்லா பயாத் இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் கடந்த திங்கட்கிழமை இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்களில் ஒன்பது சிறுவர்கள் உட்பட குறைந்தது 24 பேர் பேர் கொல்லப்பட்டனர். தவிர 103 பேர் இந்த தாக்குதல்களில் காயம் அடைந்திருப்பதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

மறுபுறம் கடந்த 24 மணி நேரத்திற்குள் ஜெரூசலம் மற்றும் மேற்குக் கரையில் இஸ்ரேலிய படைகளுடனான மோதல்களில் 700க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் காயமடைந்துள்ளனர். இவர்களில் சுமார் 500 பேர் வரை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்றையதினம் இஸ்ரேல் நடத்திய மிலேச்சத்தனமான வான்வழி தாக்குதலில், காசாவிலுள்ள 13 மாடிகளைக் கொண்ட குடியிருப்புத் தொகுதி முற்றாக தகர்க்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து, பதிலுக்கு 130 ரொக்கெட்டுகளை இஸ்ரேலை நோக்கி வீசியதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் காசாவில் இருந்து நேற்று இடம்பெற்ற ரொக்கெட் தாக்குதல்களில் ஆறு பொதுமக்கள் காயமடைந்ததாக இஸ்ரேல் கூறியுள்ளது.

ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெரூசலத்தில் கடந்த சில நாட்களாக வன்முறை நீடித்த நிலையில் அங்குள்ள அல் அக்ஸா பள்ளவாசல் வளாகத்திற்குள் நுழைந்திருக்கும் இஸ்ரேலிய படையினர் வெளியேறுவதற்கு காசாவில் ஆட்சி புரியும் ஹமாஸ் அமைப்பு கெடு விதித்திருந்த நிலையிலேயே ரொக்கெட் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

‘ஜெரூசலம் மற்றும் அல் அக்சா பள்ளிவாசலில் இஸ்ரேல் மேற்கொள்ளும் அனைத்து வகையான ஆக்கிரமிப்பு பயங்கரவாதச் செயல்களையும் நிறுத்தும் வரை ரொக்கெட் தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெறும்’ என்று ஹமாஸ் தலைவர் இஸ்மைல் ஹனியே தெரிவித்துள்ளார்.

அல் அக்ஸா பள்ளிவாசல் வளாகத்திற்குள் கடந்த திங்கட்கிழமை மூன்றாவது நாளாகவும் நுழைந்த இஸ்ரேலிய பொலிஸார் ரமலான் மாதத்தின் இறுதி நாட்களில் தொழுகையில் ஈடுபட்டிருந்த பலஸ்தீனர்கள் மீது இரப்பர் குண்டுகள் மூலம் சூடு நடத்தியதோடு கண்ணீர் புகைப்பிரயோகமும் மேற்கொண்டனர். கடந்த திங்கட்கிழமை கடும் மோதல் இடம்பெற்ற நிலையில், அல் அக்ஸா பள்ளிவாசலில் பலஸ்தீன வழிபாட்டாளர்கள் நேற்று அதிகாலை தொழுகையை அமைதியாக நிறைவேற்றினர். அந்த வளாகத்தை சூழ இஸ்ரேல் தனது பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைத்துள்ளது. ‘காசாவின் பயங்கரவாத அமைப்புகள் ஜெரூசலத்தின் புறநகர் பகுதியில் எம்மீது ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி சிவப்புக் கோட்டை தாண்யுள்ளனர்’ என்று இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜெரூசலத்தின் பழைய நகரில் உள்ள புனித வளாகத்தில் பலஸ்தீன ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் இஸ்ரேல் பொலிஸார் இடையே மோதல் உக்கிரம் அடைந்துள்ளது. இது கடந்த பல ஆண்டுகளில் ஜெரூசலத்தில் இடம்பெறும் பெரும் வன்முறையாக மாறியுள்ளது.

யூதக் குடியேறிகளால் கிழக்கு ஜெரூசலத்தில் உள்ள பலஸ்தீன குடும்பங்களை வெளியேற்ற முயற்சிப்பது பலஸ்தீனர்களிடையே ஆத்திரத்தை தூண்டிய சூழலில் தற்போதைய பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அனைத்து தரப்புகளையும் அமைதி காக்கும்படி சர்வதேச நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன.இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனர்கள் முடியுமான விரைவில் பதற்றத்தை தணிக்க வேண்டும் என்று அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரிட்டன் அழைப்பு விடுத்துள்ளன. எனினும் ஜெரூசலத்தில் இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனர்களுக்கு இடையிலான தற்போதைய மோதல்கள் தொடர்பில் ஐ.நா பாதுகாப்புச் சபை அறிக்கை ஒன்றை விடுக்க எதிர்பார்த்தபோதும் அமெரிக்கா அதற்கு முட்டுக்கட்டை போட்டதாக இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த பதற்றம் தொடர்பில் பேசுவதற்கு பாதுகாப்புச் சபை கடந்த திங்கட்கிழமை கூடியது.

இஸ்ரேல் - பாலத்தீன மோதலின் மையமாக கிழக்கு ஜெரூசலம் உள்ளது. இந்த பகுதி தங்களுக்குத்தான் சொந்தம் என்று இரு தரப்பினரும் கூறுகின்றனர்.

1967ஆம் ஆண்டு நடந்த மத்திய கிழக்கு போருக்குப் பின் கிழக்கு ஜெரூசலம் நகரை இஸ்ரேல் ஆக்கிரமித்தது. 1980ஆம் ஆண்டு இஸ்ரேல் அரசு கிழக்கு ஜெரூசலத்தை தங்களுடன் இணைத்துக் கொண்டது.

ஒட்டுமொத்த ஜெரூசலம் நகரும் தங்களது தலைநகரம் என்று இஸ்ரேல் கருதுகிறது. ஆனால் சர்வதேச நாடுகள் பலவும் இதை அங்கீகரிக்கவில்லை.

எதிர்காலத்தில் அமையக் கூடும் என்று தாங்கள் நம்பும் சுதந்திர நாட்டுக்கு கிழக்கு ஜெரூசலம்தான் தலைநகராக அமையும் என்று பாலஸ்தீனர்கள் கூறுகிறார்கள்.

 

Wed, 05/12/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை