கல்முனை விடயத்தில் ஒன்றிணைந்தது போன்று அரசியல் கைதிகள் விடுதலை விடயத்திலும் ஒன்றுபடுங்கள்

- உறவினர்கள், தமிழ் தலைமைகளிடம் கோரிக்கை

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில் ஒன்றிணைந்து செயற்பட்டதை போன்று தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையினையும் தமிழ் அரசியல் கட்சிகள் இணைந்து வலியுறுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் அறிக்கையொன்றின் மூலம் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவதற்காக தமிழ் தேசிய கட்சிகளின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து அமைச்சர் சமல் ராஜபக்‌ஷவுடன் கலந்துரையாடியுள்ளனர். இது ஒரு ஆரோக்கியமான விடயமாகும்.

அதேநேரம், கொழும்பு புதிய மகசின் சிறையில் 40 பேரும், அனுராதபுர சிறையில் 27 பேரும், நாட்டில் உள்ள மேலும் பல்வேறு சிறைகளில் 12 பேரும் என மொத்தமாக 79 தமிழ் அரசியல் கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

வயோதிபர்கள், அவயங்கள் பாதிக்கப்பட்டவர்களும் அவர்களில் அடங்குகின்றனர். அவர்கள் நீண்ட காலமாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதால் பல நோய் தொற்றுகளுக்கும் ஆளாகியுள்ளனர். சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என தெரிவித்து போராட்டங்களில் ஈடுப்பட்ட அவர்களது பெற்றோர்களில் பலரும் தற்போது உயிருடன் இல்லை.

கொரோனா வைரஸ் காரணமாக சிறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியினை குறைப்பதற்காக விசேட ஏற்பாடுகளின் கீழ் ஆயிரக்கணக்கான கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் தமிழ் அரசியல் கைதிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.

எனவே இந்த சந்தர்ப்பத்திலாவது அவர்களை விடுதலை செய்வதற்கு தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கைதிகளின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tue, 05/11/2021 - 10:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை