அறிகுறிகளற்ற தொற்றாளர்கள் ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கு

அறிகுறிகளற்ற தொற்றாளர்கள் ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கு-Ayurveda Hospitals to Treat Asymptomatic COVID19 Patients

அறிகுறியற்ற கொவிட்-19 தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்க ஆயுர்வேத மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆரம்ப சுகாதார பராமரிப்பு, தொற்றுநோய்கள் மற்றும் கொவிட்-19 நோய் கட்டுப்பாட்டு அமைச்சர் சுதர்ஷனி பெனாண்டோபுள்ளேயினால் குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, சுதேச வைத்திய முறைகளின்‌ மேம்பாடு, கிராமிய மற்றும்‌ ஆயுர்வேத வைத்தியசாலைகள்‌ அபிவிருத்தி மற்றும்‌ சமூக சுகாதார இராஜாங்க அமைச்சர், சிசிர ஜயகொடி‌ தெரிவித்தார்.

அந்த வகையில், பொரளை (இராஜகிரிய) ஆயுர்வேத போதனா வைத்தியசாலை, நாவின்னா ஆயுர்வேத வைத்தியசாலை, பல்லேகலை ஆயுர்வேத வைத்தியசாலை ஆகிய மூன்று மருத்துவமனைகள் மூலம் அறிகுறிகள் அற்ற கொவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க, அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுதர்ஷனி பெனாண்டோபுள்ளே தெரிவித்தார்.

தற்போதுள்ள நிலையில் கொவிட்-19 தொற்றாளர்களை அனுமதிப்பது தொடர்பில் சாத்தியப்பாடான அனைத்து இடங்களையும் அடையாளம் காண வேண்டிய நிலையில் உள்ளதாகவும், அதற்கமையவே குறித்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாக, சுதர்ஷனி பெனாண்டோபுள்ளே சுட்டிக்காட்டினார்.

ஆயினும், இதன்போது அறிகுறிகள் தென்படும் நோயாளிகளை, கொவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ள சிகிச்சை நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே, புது வருட பண்டிகை காலத்தைத் தொடர்ந்து, அதிகரித்துள்ள கொவிட்-19 தொற்றாளர்கள் காரணமாக, கொவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகள் அதன் உச்ச வரம்பை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதற்கமைய இந்நெருக்கடியைக் குறைப்பதற்காக கொவிட்-19 தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வசதிகளுடைய அனைத்து இடங்களையும் அடையாளம் காணுவது தொடர்பில் அரசாங்கம் தற்போது கவனம் செலுத்தி வருகிறது.

Sun, 05/02/2021 - 19:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை