பொதுமக்களின் ஒத்துழைப்பு இன்றி கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது

கொரோனா தொடர்பாக அரசாங்கத்தை குறை கூறுவதைவிட சுகாதார நடைமுறைகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டியது பொதுமக்களின் கடமையாகும் என முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் ஜக்கிய முன்னணியின் பொதுச் செயலாளருமான சுப்பையா சதாசிவம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு நேற்று (06.05.2021) கருத்து தெரிவிக்கையில்.

தற்பொழுது எமது நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதி பிரதமர் உட்பட்ட அரசாங்கம் முறையான திட்டமிடல் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை பல சவால்களுக்கு மத்தியில் பாதுகாப்பு பிரிவினரும் சுகாதார பிரிவினரும் நடைமுறைபடுத்தி வருகின்றனர். இன்று ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது எங்களுடைய நாடு மிகவும் பாதுகாப்பான ஒரு நாடாகவே இருக்கின்றது.

நாட்டில் இருக்கின்ற அனைவரும் தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்கினால் மாத்திரமே கொரோனா தொற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும். தனியே அரசாங்கத்தால் மாத்திரம் இதனை கட்டுப்படுத்த முடியாது.

இன்று சர்வதேச நாடுகளை எடுத்துக் கொண்டால் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் பொது மக்களின் ஒத்துழைப்பு அதிகமாகவுள்ளது. அந்த அடிப்படையிலேயே நியூசிலாந்து, கனடா போன்ற நாடுகள் இந்த தொற்றை கட்டுப்படுத்தியுள்ளது.

அந்த நாடுகளில் வசிக்கின்றவர்கள் அரசாங்கத்தின் சட்டதிட்டங்களையும் சுகாதார பிரிவினரின் அறிவுரைகளையும் கேட்டு நடக்கின்றனர். தங்களுடைய பாதுகாப்பை தாங்களே உறுதி செய்து கொள்கின்றனர். இப்படி எல்லா நாடுகளிலும் உள்ளவர்கள் செயற்படுவார்களானால் நிச்சயமாக இதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும். அரசாங்கம் எந்தளவிற்கு திட்டமிட்டாலும் பாதுகாப்பு பிரிவினர் எந்தளவிற்கு சட்டங்களை அமுல்படுத்தினாலும் இறுதியாக பொது மக்களின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால் எந்த ஒரு விடயமும் சாத்தியமாகாது.

எனவே இந்த விடயங்களை பொது மக்கள் நன்கு உணர வேண்டும். அரசாங்கத்தில் சில குறைபாடுகள் இருக்கலாம்.இவ்வாறான ஒரு இக்கட்டான நிலைமையில் அதனை தவிர்க்க முடியாது. ஆனாலும் பொது மக்கள் அனைத்து விடயங்களையும் கருத்திற் கொண்டு தங்களுடைய பாதுகாப்பையும் தங்களுடைய குடும்பத்தின் பாதுகாப்பையும் உறுதி செய்து கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நுவரெலியா தினகரன் நிருபர்

Fri, 05/07/2021 - 11:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை