பலஸ்தீன் தாக்குதல் தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் கண்டனம்

பலஸ்தீனத்தின் காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் மிலேச்சத்தனமான தாக்குதல்களையும் பலஸ்தீனத்திலுள்ள ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதும் மேற்கொண்டுள்ள தாக்குதல்களையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வன்மையாக கண்டிப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸாவில் அமைந்துள்ள அல்ஜஸீரா அசோசியேட் பிரஸ் பீரோ போன்ற பிரதான சர்வதேச ஊடக நிறுவனங்களின் அலுவலகங்கள் மற்றும் அவற்றின் கலையகங்கள் அமைந்துள்ள கட்டடம் இஸ்ரேலிய வான் படையினரால்‌ தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. இது ஊடக சுதந்திரத்திற்கு இழைக்கப்பட்டுள்ள மாபெரும் அத்துமீறலாகுமென்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  புனித ரமழான் மாதத்தின் இறுதி நாட்களை இலக்கு வைத்தும் பெருநாள் தினத்தன்றும் அதனைத் தொடர்ந்தும் காஸா பிராந்தியம் மற்றும் அல் அக்ஸா வளாகம் என்பன மீது இஸ்ரேல் நடத்தி வரும் மனிதாபிமானமற்ற கொடூர தாக்குதல்களை கண்டிக்க முன்வருமாறு உலக நாடுகளுக்கு அழைப்பு விடுக்கிறோம்.

கிழக்கு ஜெரூசலமில் உள்ள ஷெய்க் ஜர்ராவிற்கு அருகில் வசிக்கும் நூற்றுக்கணக்கான பலஸ்தீனியர்களை சட்டத்திற்கு முரணாக வெளியேற்றுவதற்கும் சட்டவிரோத இஸ்ரேலிய குடியேற்றங்களை நிறுவுவதற்குமான முயற்சிகளை கடந்த சில வாரங்களாக இஸ்ரேல் முன்னெடுத்து வருகிறது.

இத் தாக்குதல்களை கண்டிக்கவும் இஸ்ரேலின் இந்த நடவடிக்கைகளை தட்டிக் கேட்கவும் உலக நாடுகள் முன்வர வேண்டும் என்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Mon, 05/17/2021 - 13:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை