செயற்பாட்டாளரை கைதுசெய்ய விமானத்தை வலுக்கட்டாயமாகத் தரையிறக்கிய பெலாரஸ்

கடும் நடவடிக்கைக்கு தயாராகும் ஐரோப்பிய ஒன்றியம்

பெலாரஸ் நாட்டு செயற்பாட்டாளர் ஒருவரை ஏற்றிச்சென்ற ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான விமானம் ஒன்றை வலுக்கட்டாயமாக திசைதிருப்பதியது தொடர்பில் பெலாரஸ் மீது மேற்குலக நாடுகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

இதனை ஒரு விமானக் கடத்தல் என்று ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டிருக்கும் நிலையில் அந்த அமைப்பின் தலைவர்கள் இதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதோடு இதனை ஒரு அதிர்ச்சி அளிக்கும் செயற்பாடு என்று அமெரிக்க இராஜாங்க திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

லிதுவேனியாவை நோக்கி புறப்பட்ட இந்த விமானத்தை பெலாரஸ் குண்டு அச்சுறுத்தல் இருப்பதாக குறிப்பிட்டு தலைநகர் மின்ஸ்க்கில் வலுக்கட்டாயமாக தரையிறக்கியது.

இதனை அடுத்து விமானத்தில் இருந்த பெலாரஸ் ஊடகவியலாளர் மற்றும் செயற்பட்டாளரான ரோமன் ப்ரொடசவிச் கைது செய்யப்பட்டார்.

26 வயதான அந்த செயற்பாட்டாளர் ஏதன்ஸில் இருந்து அந்த விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்தார். லிதுவேனிய தலைநகரில் தரையிறங்கவிருந்த அந்த விமானம் பெலாரஸ் வான் பரப்பில் இருந்தபோது போர் விமானங்களை பயன்படுத்தி அதன் பயணம் திசை திருப்பப்பட்டுள்ளது.

அந்த செயற்பட்டாளர் அதிகம் பயந்திருந்ததாகவும் தாம் மரண தண்டனைக்கு முகம்கொடுக்கலாம் என்று குறிப்பிட்டதாகவும் விமானத்தில் இருந்த சக பயணிகள் தெரிவித்துள்ளனர்.

பெலரஸ் ஜனாதிபதி லுகசென்கோவுக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆர்ப்பட்டங்களைத் தூண்டிவிட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

செய்தியாளர் கைதான பின்னர் விமானம் பயணத்தைத் தொடர அனுமதிக்கப்பட்டது.

பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகசென்கோ தனிப்பட்ட முறையில் இந்த நடவடிக்கைக்கு உத்தரவிட்டதாக அந்நாட்டு அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. பின்னர் விமானம் திட்டமிட்ட நேரத்திற்கு ஆறு மணி நேரம் கழித்து லிதுவேனிய தலைநகர் வில்னியுசில் தரையிறங்கியது.

1994 ஆம் ஆண்டு தொடக்கம் ஆட்சியில் இருக்கும் 66 வயதான லுகசென்கோ கடந்த ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய தேர்தலில் வெற்றியீட்டியது தொடக்கம் எதிர்ப்பாளர்களின் குரலை ஒடுக்குவதில் தீவிரம் காட்டி வருகிறார்.

பல எதிர்த்தரப்பினர் கைது செய்யப்பட்டிருப்பதோடு மேலும் பலர் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் ஐரோப்பிய ஒன்றியத்தின் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. கைது செய்யப்பட்ட ப்ரொடசவிச்சை விடுவிக்க வேண்டும் என்றும் இது பற்றி முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அந்த நாடுகள் கோரியுள்ளன.

ஐரோப்பிய ஒன்றிய கூட்டத்தில் பெலாரஸ் மீது புதிய பொருளாதார தடைகள் விதிக்கப்பட வேண்டும் என்று லிதுவேனிய ஜனாதிபதி கிடனாஸ் நவுசெதா அழைப்பு விடுத்துள்ளார்.

பெலாரஸ் ஜனாதிபதி லுகசென்கோ உட்பட அந்நாட்டு அதிகாரிகள் பலரும் பயணத் தடை, சொத்துகளை முடக்குவது உட்பட ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகளுக்கு முகம்கொடுத்துள்ளனர்.

‘ஆத்திரமூட்டும் சட்டவிரோட நடத்தைகளுக்கான விளைவுகளை சந்திக்க வேண்டி ஏற்படும்’ என்று ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுல் வொன் டெர் லெயென் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டொனியோ பிளிங்கன் இதனை ‘அதிர்ச்சி அளிக்கு செயற்பாடு’ என்று குறிப்பிட்டிருப்பதோடு, ‘எமது நட்பு நாடுகளின் அடுத்த கட்ட நடவடிக்கைகளுடன் ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகம் ஒருங்கிணைந்து செயற்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

Tue, 05/25/2021 - 09:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை