நாட்டில் அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் நோயாளர் எண்ணிக்கை உச்சத்தில்

- மக்கள் பொறுப்புடன் செயற்பட தவறினால் விளைவுகள் மோசமாகும்
- இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வரும் நிலையில் நாட்டிலுள்ள அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் கொள்ளளவு உச்ச மட்டத்தில் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

அதேவேளை அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளை விட அதிகமான நோயாளர்கள் சமூகத்தில் உள்ளதாக கருத முடிவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இத்தகைய சூழ்நிலையில் பிசிஆர் பரிசோதனை மேற் கொள்ளப்பட்ட பின் அதன் அறிக்கை கிடைக்கும் வரை வீடுகளிலிருந்து வெளியேற வேண்டாமென்றும் அவர் நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தற்போது தினமும் பெருமளவில் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதால் அறிக்கைகள் வெளிவருவதில் தாமதம் ஏற்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்வரும் 2,3, வாரங்களுக்கு தேவையற்ற பயணங்களை தவிர்த்துக் கொள்ளவும் சுகாதார வழிகாட்டலுக்கிணங்க செயற்படுமாறும் கேட்டுக் கொண்டுள்ள அவர், எச்சரிக்கை மிகுந்த இந்த காலகட்டங்களில் வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொறுப்புடன் ஒத்துழைப்பு வழங்குமாறும் நாட்டு மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். மக்கள் அவ்வாறு செயல்படத் தவறினால் வைரஸ் பரவல் பாரிய அளவில் அதிகரித்து மோசமான விளைவை ஏற்படுத்துவதை தவிர்க்க முடியாது போகும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை தற்போதைய சூழ்நிலையில் வெளிநாடுகளிலிருந்து வருகை தருவோர் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவது அவசியம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்கள் அனைத்தும் வைரஸ் தொற்று நோயாளர்களுக்கான சிகிச்சை மத்திய நிலையங்களாக மாற்றுவதற்கான அவசியம் ஏற்பட்டுள்ள நிலையில் கடந்த காலங்களைப் போன்று பெருமளவிலானோர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பினால் அவர்களை தனிமைப்படுத்துவதில் சிக்கல்களை எதிர்கொள்ள நேரும் என்றும் அந்தவகையில் உள்ளூர் நோயாளர்களுக்கே தற்போது முக்கியத்துவம் வழங்க வேண்டிய தேவை உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 05/07/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை