கொவிசீல்ட் தடுப்பூசிகளை இந்தியாவிடமிருந்து பெறுவதில் நெருக்கடியான சூழ்நிலை

- மாற்றுத் திட்டங்கள் குறித்து ஆலோசித்து வருவதாக விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவிப்பு 

இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொவிட்19 பரவல் நெருக்கடியால் கொவிசீல்ட் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொவிட்19 பரவல் மற்றும் நெருக்கடிக்கு மத்தியில் அந்நாட்டிடமிருந்து கொவிசீல்ட் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென நாம் எதிர்பார்க்க முடியாது. கொவேக்ஸ் வேலைத்திட்டத்தின் கீழ் கொவிசீல்ட் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டு ஏனைய நாடுகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இந்தியாவில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையால் அவர்களுக்கு தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது.

முதல் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொடுத்தவர்களுக்கு வேறு ஒரு தடுப்பூசியை பெற்றுக்கொடுப்பது தொடர்பிலான ஆய்வுகள் உலகளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்றன. இந்தஆய்வுகளில் சாதகத் தன்மை ஏற்பட்டு அந்த தடுப்பூசியை எமது நாட்டுக்குப் பெற்றுக்கொள்ளக் கூடியதாகவிருந்தால் இரண்டாவது தடுப்பூசியாக அதனை வழங்க முடியும். அவ்வாறு முடியாவிடின் முதல் தடுப்பூசியை மறந்துவிட்டு வேறு இரண்டு தடுப்பூசிகளைதான் வழங்க முடியும்.

தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தில் இரண்டு தடுப்பூசிகளை வழங்க முடியாத சூழலில் முடிந்தளவு முதல் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொடுக்குமாறும் அது மிகவும் சாதகத்தன்மையை ஏற்படுத்தக் கூடிய சூழல் உள்ளதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் கூறியுள்ளது என்றார்.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொவிசீல்ட் தடுப்பூசிகளை ஏனைய நாடுகளுக்கு வழங்கும் பணி எதிர்வரும் ஜுலை மாதம்வரை தாமதமாகலாமென ‘தி இந்து’ பத்திரிகை நேற்று வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சுப்பிரமணியம் நிஷாந்தன் 

Sat, 05/01/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை