ஜெரூசலத்தில் இரண்டாவது இரவாக கடும் மோதல்; 90 பலஸ்தீனர் காயம்

ஜெரூசலம் நகரின் பலஸ்தீனர்கள் மற்றும் இஸ்ரேலிய பொலிஸாருக்கு இடையே கடந்த சனிக்கிழமை இரவு இடம்பெற்ற புதிய மோதல்களில் பலரும் காயமடைந்துள்ளனர்.

பழைய நகரின் டமஸ்கஸ் வாயிலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸார் மீது கற்களை எறிந்து தாக்குதலில் ஈடுபட்டனர். மறுபுறம் பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது அதிர்ச்சி அளிக்கும் கையெறி குண்டுகள், ரப்பர் குண்டுகளால் சூடு நடத்தியதோடு தண்ணீரைப் பீச்சடித்தனர்.

இதன்போது 90 பலஸ்தீனர்கள் காயமடைந்ததாக பலஸ்தீன மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோன்று ஒரு அதிகாரி காயமடைந்ததாக இஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜெரூசலத்தில் யூதக் குடியேறிகள் உரிமை கோரும் நிலத்தில் இருந்து பலஸ்தீனர்களை வெளியேற்றும் முயற்சி இடம்பெறும் நிலையிலேயே இந்த பதற்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

இதில் முஸ்லிம்களின் ரமலான் மாதத்தின் புனித இரவான லைலதுல் கதிர் இரவில் ஆயிரக்கணக்கான வழிபாட்டாளர்கள் டமஸ்கஸ் வாயிலில் ஒன்றுகூடிய சூழலிலேயே கடந்த சனிக்கிழமை இரவு மோதல் வெடித்தது.

‘அவர்கள் நாம் தொழுவதை விரும்புவதில்லை. அங்கு எந்நாளும் மோதல் வெடிக்கிறது. எந்நாளும் பிரச்சினையாக உள்ளது’ என்று 27 வயதான மஹ்மூத் அல் மர்பு ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.

அல் அக்ஸா பள்ளிவாசலுக்கு அருகே கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மோதலில் 200க்கும் அதிகமான பலஸ்தீனர்களும் 17 இஸ்ரேலிய பொலிஸாரும் காயமடைந்ததாக அவசர பணியாளர்கள் மற்றும் இஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்தனர்.

ஜெரூசலம் அல் அக்ஸா பள்ளிவாசல் முஸ்லிம்களின் புனிதத் தலங்களில் ஒன்றாகும். ஆனால் டெம்பிள் மௌன்டன் என்று அழைக்கப்படும் அந்தப் பகுதி யூதர்களின் புனிதத் தலமாகவும் உள்ளது. இங்கு தொடர்ச்சியான மோதல்கள் இடம்பெறுகின்றபோதும் கடந்த பல ஆண்டுகளில் இடம்பெற்ற மோசமான சம்பவமாக தற்போதைய மோதல் உள்ளது.

இங்கு வன்முறை அதிகரித்திருப்பது குறித்து மத்திய கிழக்கு பேச்சுவார்த்தையாளர்கள், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யா மற்றும் ஐ.நா கவலை வெளியிட்டுள்ளன.

இதேநேரம் ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும் காசா பகுதியில் இருந்து கடந்த சனிக்கிழமை இஸ்ரேலை நோக்கி ரொக்கெட் குண்டுகள் வீசப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

‘இதற்கு பதில் நடவடிக்கையாக எமது போர் விமானங்கள் தெற்கு காசாவில் ஹமாஸ் இராணுவ முகாம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியது’ என்று இஸ்ரேல் பாதுகாப்பு படை ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளது.

1967 மத்திய கிழக்கு போர் தொடக்கம் கிழக்கு ஜெரூசலம் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பில் உள்ளது. ஜெரூசலம் முழுவதையும் தமது தலைநகராக இஸ்ரேல் அறிவித்தபோதும் அதிகப் பெரும்பான்மையான சர்வதேச சமூகம் அதனை அங்கீகரிக்கவில்லை.

இந்நிலையில் கிழக்கு ஜெரூசலத்தின் செய்க் ஜெர்ரா மாவட்டத்தைச் சேர்ந்த பலஸ்தீன குடும்பங்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு இஸ்ரேல் முயற்சிப்பதே அண்மைய பதற்றம் அதிகரிப்பதற்கு காரணமாகும்.

இந்த முயற்சியை இஸ்ரேல் கைவிட வேண்டும் என்று ஐ.நா வலிறுயுத்துவதோடு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக பலப்பிரயோகத்தை பயன்படுத்துவதில் கட்டுப்பாட்டை பேண வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

வலுக்கட்டாயமான வெயியேற்றத்தை தடுக்க சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் என்று அரபு லீக் நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன.

இது தொடர்பில் நீண்ட காலமாக நீடிக்கும் சட்டப் பிரச்சினை குறித்து இஸ்ரேலிய உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Mon, 05/10/2021 - 13:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை