9 மாகாணங்களுக்கும் புதிதாக பிரதி சுகாதார பணிப்பாளர்கள்

நியமிக்கவுள்ளதாக அமைச்சர் பவித்ரா தெரிவிப்பு

நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துச் செல்லும் நிலையில், மாகாண மட்டத்தில் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் விசேட வேலைத்திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றன. அதற்கிணங்க ஒன்பது மாகாணங்களுக்கு 9 பிரதி சுகாதார  சேவைகள் பணிப்பாளர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

மேற்படி 9 பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் களுக்கும் உரிய பணிப்புரைகள் வழங்கியுள்ளது. சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி: மேற்படி வேலைத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாகாணத்திற்கும் நேரடியாக சென்று நிலைமைகளை பார்வையிட்டு தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அவர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதேவேளை, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் ஒரு

வார்ட்டை கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சைகளுக்காக ஒதுக்குமாறும் அவர் அனைத்து ஆஸ்பத்திரிகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.

சுகாதார அமைச்சின் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தல் வேலைத் திட்டங்களுக்காக நாடளாவிய ரீதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சிகிச்சை மத்திய நிலையங்கள் மற்றும் அதற்கான வசதிகளை ஆராயுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுகாதார அமைச்சருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அதற்கிணங்க முதற்கட்டமாக இரத்தினபுரி மாவட்ட வைத்தியசாலைக்கு விஜயம் செய்துள்ள சுகாதார அமைச்சர் அங்கு நிலவும் குறை நிறைகளை கேட்டறிந்துள்ளார்.

அத்துடன் தனிமைப்படுத்தலுக்காக முடக்கப்பட்டுள்ள எம்பிலிப்பிட்டி பொலீஸ் நிர்வாகப் பிரிவில் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலை,ரக்வான,கஹவத்த வைத்தியசாலைகள், ருவன்புர கொரோனா வைரஸ் சிகிச்சை நிலையம் ஆகியவற்றிற்கு அமைச்சர் நேரடி கண்காணிப்பை மேற்கொண்டுள்ளார். இதன்போது கருத்து தெரிவித்துள்ள சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி:

நாட்டின் அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சை நடவடிக்கைகளுக்காக ஒரு வார்ட் என்ற வீதத்தில் ஒதுக்குமாறு சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை நாட்டில் 105 கொரோனா வைரஸ் சிகிச்சை நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 19 ஆயிரம் கட்டில்கள் வைரஸ் தொற்று நோயாளிகளுக்காக தயார் படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் இராணுவத்தினரால் சீதுவை பிரதேசத்தில் 1500 கட்டில்களை கொண்டசிகிச்சை மத்திய நிலையம் ஒன்றும் பூசா பிரதேசத்தில் அதேபோன்று மற்றுமொரு சிகிச்சை நிலையமும் ஸ்தாபிக்கப்பட்டு ள்ளதாகவும் தெரிவித்தார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

 

 

Mon, 05/10/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை