இஸ்ரேல் - காசா மோதல் உக்கிரம்; 43 பலஸ்தீனர், 6 இஸ்ரேலியர் பலி

முழுவீச்சில் போர் வெடிக்கும் அச்சம்

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போராளிகளுக்கு இடையிலான மோதல் உக்கிரமடைந்துள்ள நிலையில் காசா பகுதியில் குறைந்தது 43 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு இஸ்ரேலில் அறுவர் பலியாகியுள்ளனர். கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அங்கு வான் தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளது.

இதில் இஸ்ரேலிய குண்டு வீடொன்றில் விழுந்ததில் காசா நகரின் டெல் அல் ஹாவா பகுதியைச் சேர்ந்த ஆடவர் ஒருவர், அவரது கர்ப்பிணி மனைவி மற்றும் அவரது ஐந்து வயது ஆண் பிள்ளை ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.

தற்போதைய தாக்குதல் ஆரம்பித்தது தொடக்கம் 13 சிறுவர்கள் உட்பட மொத்தம் 43 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும், குறைந்தது 290 பேர் காயமடைந்திருப்பதாகவும் காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்று புதன்கிழமை காலை முற்றுகையில் உள்ள காசா மீது இஸ்ரேல் நூற்றுக்கணக்கான வான் தாக்குதல்களை நடத்திய அதேநேரம், ஹமாஸ் அமைப்பு மற்றும் ஏனைய பலஸ்தீன போராட்டக் குழுக்கள் இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் பீர் ஷாபாவை நோக்கி ரொக்கெட் குண்டுமழை பொழிந்தன.

இஸ்ரேல் போர் விமானங்கள் அடுத்தடுத்து குண்டு வீசியதால் காசாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்த நிலையில் மற்றொரு கட்டிடம் பெரும் சேதத்திற்கு உள்ளானது.

ஹமாஸ் அமைப்பின் பல்வேறு உளவுப் பிரிவு தலைவர்களை போர் விமானங்கள் இலக்கு வைத்து கொன்றதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது. தவிர ரொக்கெட் குண்டு வீசுமிடம், ஹமாஸ் அலுவலகங்கள் மற்றும் ஹமாஸ் தலைவர்களின் வீடுகள் இலக்கு வைக்கப்பட்டதாகவும் அது கூறியது.

2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற காசா போருக்கு பின்னர் ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான கடும் மோதலாக இது மாறியிருக்கும் நிலையில், நிலைமை கட்டுப்பாட்டை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

‘தாக்குதல்களை உடன் நிறுத்துங்கள். நாம் முழுமையான போர் ஒன்றை நோக்கி செல்கிறோம். மோதலை நிறுத்துவதற்கு அனைத்து தலைவர்களும் பொறுப்பேற்க வேண்டும்’ என்று ஐ.நாவின் மத்திய கிழக்கு அமைதி தூதுவர் டோர் வென்னஸ்லாண்ட் அழுத்தம் கொடுத்துள்ளார்.

‘காசாவில் போர் பேரழிவுகளுக்கு காரணமாவதோடு அதன் விளைவை சாதாரண மக்களே சந்திக்கின்றனர். அமைதியை கொண்டுவர ஐ.நா அனைத்து தரப்புடனும் இணைந்து செயற்படுகிறது. வன்முறைகளை இப்போதே நிறுத்துங்கள்’ என்றும் அவர் எழுதியுள்ளார்.

இஸ்ரேலின் தாக்குதல்களால் காசாவில் வீடுகள் அதிர்ந்ததோடு தீப்பிழம்புகள் வானை முட்டின. நேற்று புதன்கிழமை அதிகாலையில் சில நிமிடங்களுக்குள் முப்பதுக்கும் அதிகமான வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

காசாவில் இருந்து வரும் ரொக்கெட் குண்டுகள் இஸ்ரேலிய வானை ஆக்கிரமித்த நிலையில் இஸ்ரேலியர்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கியும் ஓட்டம்பிடித்தும் தரையில் படுத்துக்கொண்டும் தம்மை காத்துக்கொள்ள முயன்றனர். இந்த ரொக்கெட் குண்டுகளை இஸ்ரேலிய வான் பாதுகாப்பு முறை இடைமறித்தது.

டெல் அவிவுக்கு அருகில் அரபு மற்றும் யூதர்கள் வாழும் லொட் நகரில் வாகனம் ஒன்றின் மீது ரொக்கெட் குண்டு விழுந்ததில் இருவர் கொல்லப்பட்டனர். இதனை ஒட்டி அந்த நகரில் உள்ள இஸ்ரேல் அரபுகள் வாகனங்கள், கட்டடங்க மீது தீ வைத்து பெரும் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக லொட் நகரில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காசாவின் அடுக்குமாடி கட்டடங்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு பதில் நடவடிக்கையாக பீர்செபே மற்றும் டெல் அவிவ் நகரை நோக்கி 210 ரொக்கெட் குண்டுகளை வீசியதாக ஹமாஸ் ஆயுதப் பிரிவு தெரிவித்தது. எனினும் இந்த குண்டுகளில் மூன்றில் ஒரு பங்கு காசாவுக்குள்ளேயே விழுந்ததாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

இதில் காசா போராளிகளின் ரொக்கெட் குண்டுகள் இஸ்ரேலிய வர்த்தக தலைநகரான டெல் அவிவை இலக்கு வைத்திருப்பது இஸ்ரேலுக்கு மற்றொரு சவாலாக உள்ளது.

முஸ்லிம்களின் புனித ரமலான் மாதத்தில் இஸ்ரேல் பொலிஸார் மற்றும் பலஸ்தீன ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையே ஜெரூசலம் அல் அக்ஸா பள்ளிவாசலை ஒட்டி அண்மைய நாட்களாக நீடிக்கு மோதல்களின் தொடச்சியாகவே இந்த பதற்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

கிழக்கு ஜெரூசலத்தில் யூதக் குடியேறிகளால் பலஸ்தீன குடும்பங்களை அவர்களின் வீடுகளில் இருந்து வெளியேற்ற முயற்சிப்பதே அண்மைய பதற்றங்களுக்கெல்லாம் காரணமாக உள்ளது. இது தொடர்பான வழக்கு வசாரணை தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வன்முறை ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைக்கும் பரவியுள்ளது. ஹப்ரோன் நகருக்கு அருகில் உள்ள அகதி முகாமில் இடம்பெற்ற மோதலின்போது இஸ்ரேலிய துப்பாக்கிச் சூட்டில் 26 வயதான பலஸ்தீனர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். அங்கு மற்றொரு கிராமத்தில் இஸ்ரேல் நடத்திய தேடுதலின்போது 16 வயது சிறுவன் ஒருவன் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

இந்த ரொக்கெட் தாக்குதல்களுக்கு எதிராக இராணுவம் கடும் பதிலளிக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகும் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவை எற்படுத்திக் கொண்ட சில நாடுகளைக் கொண்ட அரபு லீக் அமைப்பு காசாவில் இஸ்ரேல் பொறுப்பற்ற வகையில் தாக்குதல் நடத்துவதாக குற்றம்சாட்டியது.

ஹமாஸ் தனது ரொக்கெட் தாக்குதல்களுக்கு ‘ஜெரூசலத்தின் வால்’ என்று பெயரிட்டுள்ளது. ‘இஸ்ரேல், ஜெரூசலம் மற்றும் அல் அக்சாவில் மூட்டிய தீ காசா வரை பரவியுள்ளது. எனவே அதன் விளைவுகளுக்கு அது பொறுப்பேற்க வேண்டும்’ என்று ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மைல் ஹனியே தெரிவித்தார்.

கட்டார், எகிப்து மற்றும் ஐக்கிய நாடுகள் சபை தொடர்பு கொண்டு உடன் அமைதியை ஏற்படுத்த வலியுறுத்தியதாக குறிப்பிட்ட ஹனியே, ‘அவர்கள் மோதலை அதிகரிக்க விரும்பினால் போராளிகள் அதற்கு தயாராக இருக்கிறோம், அவர்கள் நிறுத்த விரும்பினால் போராளிகள் அதற்கும் தயாராக இருக்கிறோம்’ என்று அவர்களிடம் பதிலளித்ததாக குறிப்பிட்டார்.

வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிவிப்பில் ரொக்கெட் தாக்குதல்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ளும் உரிமை இஸ்ரேலுக்கு இருப்பதாகவும் ஆனால் ஜெரூசலம் ஒன்றிணைந்து வாழவேண்டிய பகுதியாக இருப்பதால், பலஸ்தீனர்களை நல்ல முறையில் நடத்துவதற்கு இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளது.

மோதல் உக்கிரமடைந்திருக்கும் நிலையில் அது பற்றி பேச்சுவார்த்தை நடத்த ஐ.நா பாதுகாப்புச் சபை நேற்று கூடியது. துனீசியா, நோர்வே, சீனா ஆகியவை இந்தச் சந்திப்புக்கு வேண்டுகோள் விடுத்தன.

முதற்கட்டச் சந்திப்பு திங்கட்கிழமை இடம்பெற்றிருந்தது. அதன் முடிவில், அமெரிக்கா காட்டிய தயக்கத்தால் கூட்டறிக்கையை வெளியிட முடியாமல் போனது.

கிழக்கு ஜெரூசலம் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் அனைத்து வன்முறை நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும் என்று அந்தக் கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததாக ஏ.எப்.பி செய்தி நிறுவனம் தெரிவித்தது.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைப் பகுதியிலும் கிழக்கு ஜெருசலத்திலும் அதிகரித்து வரும் பதற்றமும் வன்முறையும் மிகுந்த கவலையளிப்பதாக ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு சபை உறுப்புநாடுகள் கூறின. 

2014 ஆம் ஆண்டு ஏழு வாரங் கள் நீடித்த காசா போரில் 2,100 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதோடு 73 இஸ்ரேலியர்கள் பலியாகினர். இஸ்ரேலிய படையினரின் தாக்குதலில் காசாவில் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன.

Thu, 05/13/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை