பிரேசிலில் கொரோனா பலி 400,000ஐ தாண்டியது

பிரேசிலில் கொவிட்– 19 நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 400,000ஐத் தாண்டியுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் அங்கு சுமார் 3,000 பேர் நோய்த்தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதன்படி நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 401,186 ஆக உள்ளது.

பிரேசிலில் 100,000 மக்களில் 189 பேர் நோய்க்குப் பலியாகின்றனர். போதிய தடுப்புமருந்துகளைக் கையகப்படுத்த பிரேசில் தவறியதால் அது பெரும் நெருக்கடியில் உள்ளது.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் பிரேசிலில் கொவிட்– 19 கட்டுக்கடங்காமல் பரவ ஆரம்பித்தது. அங்கு கொரோனா வைரஸ் உருமாறியதால் பரவும் வேகம் கூடியது.

அதனால் மருத்துவமனைகளில் கூட்டம் அலைமோதியது, போதிய வசதிகள் இல்லாததால் சுகாதார அளவில் எண்ணற்ற சிக்கல்கள் எழுந்தன.

கடந்த வாரம் மட்டும் பிரேசிலில் நாள் ஒன்றுக்குச் சராசரியாக 2,526 பேர் உயிரிழந்தனர். குறிப்பாக மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடைப்பட்ட வெறும் 37 நாட்களுக்குள் அந்நாட்டில் 100,000 பேர் உயிரிழந்தனர் . இது அந்நாட்டில் மிக மோசமான பாதிப்பை எற்படுத்தி மாதமாக இருந்தது. இது அமெரிக்காவுக்கு மாத்திரமே இரண்டாவதாக இருந்தது. இந்த பெருந்தொற்று ஆரம்பித்தது தொடக்கம் பிரேசிலில் 14.5 மில்லியன் நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

அந்நாட்டின் மூன்றில் ஒரு பங்கு மாநிலங்களில் அவரச சிகிச்சை பிரிவு 90 வீதத்திற்கு அதிகம் நிரம்பிக் காணப்படுவதாக சுகாதார நிறுவனமான பியோக்ரூஸ் தெரிவித்துள்ளது.

இதேநேரம் தடுப்பு மருந்து தட்டுப்பாட்டால் சில மாநிலங்கல் தடுப்பு மருந்து வழங்குவதையும் தற்காலிகமாக இடை நிறுத்தியுள்ளன. 212 மில்லியன் மக்கள் தொகை கொண்ட பிரேசிலில் சுமார் 13 வீதமானவர்களுக்கே தடுப்பு மருந்து வழங்கப்பட்டிருப்பதாக தரவுகள் காட்டுகின்றன.

Sat, 05/01/2021 - 13:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை