நோயாளிகளை 30 நிமிடங்களில் பொறுப்பேற்க பணிப்பு

சுகாதார அமைச்சு விசேட சுற்றுநிருபம் வெளியீடு

 

ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரப்படும் கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளை 30 நிமிடங்களுக்குள் ஆஸ்பத்திரிகளில் பொறுப்பேற்க வேண்டியது அவசியமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன அனைத்து ஆஸ்பத்திரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.

அது தொடர்பில் நேற்று அவர் புதிய சுற்றுநிருபம்  ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரப்படும் வைரஸ் தொற்று நோயாளிகளை ஆஸ்பத்திரிகளில் பொறுப்பேற்பதற்கு பெரும் தாமதம் ஏற்படுவதாக பல்வேறு தரப்புகளிலிருந்தும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன நிலையில் அதனைக் கவனத்திற் கொண்டே மேற்படி சுற்றுநிருபம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் பாணந்துறை ஆஸ்பத்திரியில் நோயாளிகள் தரையில் தங்க வைக்கப்பட்டுள்ளமை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு அந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்துள்ளார்.

எந்தவொரு நோயாளியும் ஆஸ்பத்திரிகளில் தரையில் தங்க வைக்கப்பட இடமளிக்கப்படமாட்டாதென்றும் அவ்வாறான நிலைமை ஏற்பட்டால் அருகிலுள்ள ஆஸ்பத்திரிக்கு அவர்களை மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் ஆஸ்பத்திரி அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.(ஸ)

 

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 05/25/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை