மே 30, 31 தினங்களில் பொருளாதார மத்திய நிலையங்களை திறக்க அரசாங்கம் தீர்மானம்

- அமைச்சர் நாமல் தலைமையில் விசேட பேச்சுவார்த்தை

நடமாடும் வியாபாரிகள் மற்றும் சில்லரை வியாபாரிகள் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு வசதியாக எதிர்வரும் 30 மற்றும் 31ஆம் திகதிகளில் பொருளாதார மத்திய நிலையங்களை திறப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். 

அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் தொடர்பில் நேற்று முன்தினம் அலரிமாளிகையில் நடைபெற்ற மீளாய்வு கூட்டத்தின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். 

இதன்போது மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஊடாக அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் பொறிமுறையொன்றை தயாரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

நாட்டில் நடைமுறையிலுள்ள பயணத் தடை தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கலாமென்ற அச்சத்தில் மக்கள் ஒரே தடவையில் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்துள்ளனர். இந் நிலை தொடர்பாகவும் நடமாடும் வர்த்தகர்களுக்கு வருமானம் இல்லாத நிலை தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது. 
அத்துடன் அனைத்து பிரதேச செயலாளர்கள் பிரிவு மட்டத்திலும் பேக்கரி உற்பத்திகளை நடமாடும் விற்பனை நடவடிக்கை மூலம் விற்பனை செய்வது தொடர்பிலும் அமைச்சர் நாமல் ராஜபக்ச கவனத்திற்கு கொண்டு வந்தார். 

மேற்படி இரண்டு தினங்களிலும் சில்லரை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பொருட்களை கொள்வனவு செய்து கொள்வதற்காக பொருளாதார மத்திய நிலையம் மற்றும் மொத்த விற்பனை நிலையங்களை திறப்பதற்கும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. 

லோரன்ஸ் செல்வநாயகம்   

Sat, 05/29/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை