அமரர் ரணசிங்க பிரேமதாசவின் 28ஆவது நினைவுதினம் இன்று

முன்னாள் ஜனாதிபதி அமரர் ரணசிங்க பிரேமதாசவின் 28ஆவது நினைவுதினம் இன்று சனிக்கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது. ஒப்பற்ற தலைமைத்துவத்தை வழங்கி இலங்கையின் எதிர்கால அபிவிருத்திக்காக அவர் ஆற்றிய சேவைகள் என்றென்றும் போற்றப்பட வேண்டியவை.

1924ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி பிறந்த ரணசிங்க பிரேமாச தொழில் கட்சியிலிருந்து அரசியலுக்கு பிரவேசித்து கொழும்பு மாநகர சபை உறுப்பினராகத் தெரிவாகி, பிரதி மேயராகவும் பதவிவகித்தார்.

மக்கள் சேவையை அர்ப்பணிப்புடன் செய்த அன்னார் 1965ஆம் ஆண்டு முதன்முறையாக பாராளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தார்.அன்று முதல் உள்ளூராட்சி அமைச்சராகவும், பிரதமராகவும் பதவிவகித்த ரணசிங்க பிரேமதாச, இலங்கையின் இரண்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அரியணையில் அமரும் வரையான பயணம் அவ்வளவு இலகுவானதாக அமையவில்லை.

பிரதமராக இருந்த போது ”அனைவருக்கும் நிழல்” எனும் திட்டத்தை ஆரம்பித்த பிரேமதாச, ஜனாதிபதியாக பதவியேற்றவுடன் இந்திய அமைதி காக்கும் படையினரை திருப்பி அனுப்பும் அளவிற்கு துணிச்சல் மிக்கவரானார். அவரின் இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் பாராட்டுதலைப் பெற்றது.

கம் உதாவ, உதாகல கம்மான ஆகிய முன்மாதிரி வீடமைப்புத் திட்டங்கள் ஊடாக 2000ஆம் ஆண்டில் அனைவருக்கும் குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதே அவரின் முக்கிய இலக்காக இருந்தது.

கிராமிய அபிவிருத்தி தொடர்பில் கனவு கண்ட ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச 100 ஆடை உற்பத்தி தொழிற்சாலை திட்டத்தை ஆரம்பித்து அதனை 2000ஆக விஸ்தரிக்க நடவடிக்கை எடுத்தார்.

இந்த நடவடிக்கையால் ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகளுக்கு தொழில்கள் கிட்டின. அந்த காலப்பகுதியில் ஏற்றுமதி வருமானம் சடுதியாக அதிகரித்ததுடன், பங்குச் சந்தையும் வரலாறு காணாத முன்னேற்றம் அடைந்தது.

வறிய மக்களுக்காக ஜன சவிய திட்டத்தை அறிமுகப்படுத்திய ரணசிங்க பிரேமதாச, எதிர்கால சந்ததியினரின் பாதுகாப்பிற்காகவும் பல திட்டங்களை அறிமுகப்படுத்திய பெருமையையும் தன்னகத்தே கொண்டிருந்தார்.

1993ஆம் ஆண்டு மே தின பேரணியின் போது சற்றும் எதிர்பாராத தருணத்தில் ரணசிங்க பிரேமதாச இவ்வுலகிற்கு விடை கொடுத்திருந்தார். மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவை நினைவுகூரும் வகையில், விசேட நிகழ்வுகள் ஒழுங்குச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Sat, 05/01/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை