மெக்சிகோ மெட்ரோ மேம்பாலம் உடைந்து விழுந்ததில் 23 பேர் பலி

மெக்சிகோ தலைநகரில் ரயில் சென்றுகொண்டிருக்கும்போது மெட்ரோ மேம்பாலம் உடைந்து விழுந்ததில் 23 பேர் கொல்லப்பட்டதோடு மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

இதன்போது பல ரயில் பெட்டிகள் பரபரப்பான வீதியில் விழுந்ததில் ஒரு கார் வண்டி நொறுங்கியுள்ளது. இடிபாடுகளில் மேலும் பல வாகனங்கள் சிக்கி இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தை அடுத்து உயிர் தப்பியவர்களை மீட்கும் முயற்சியில் மீட்புப் பணியாளர்கள் மற்றும் தீயணைப்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் 70 பேர் வரை காயமடைந்திருப்பதாக கூறப்படுகிறது. பலரும் இடிபாடுகளில் சிக்கியிருக்கும் நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது.

‘இடி முழக்கம் போன்ற சத்தத்தை கேட்டோம். அனைத்தும் உடைந்து விழுந்தன’ என்று இந்த விபத்தில் உயிர் தப்பிய 26 வயதான மரியானா என்பவர் எல் யுனிவர்ஸ் என்ற செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற பயங்கர பூகம்பத்தை அடுத்து இந்த மேம்பாலத்தில் வெடிப்பு ஏற்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எனினும் அது பற்றி தெரிந்ததும் நிர்வாகம் அதனை சரி செய்ததாக அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.

மெக்சியோ சிட்டியின் மெட்ரோ ரயில் போக்குவரத்து உலகின் மிகப்பெரிய விரைவு போக்குவரத்து அமைப்புகளில் ஒன்றாக உள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 1.6 பில்லியன் பயணிகள் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

இதில் விபத்துக்குள்ளாகி இருக்கும் லைன் 12 பாதை தலைநகரின் மெட்ரோ அமைப்பிற்கு மேலதிகமாக சேர்க்கப்பட்டது. இது 2012 ஆம் ஆண்டு உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டது.

Wed, 05/05/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை