பல்கலைக்கழக அனுமதி விண்ணப்பங்கள் மே 21 - ஜூன் 11 வரை ஏற்பு

பல்கலைக்கழக அனுமதி விண்ணப்பங்கள் மே 21 - ஜூன் 11 வரை ஏற்பு-Application Called for Unversity Admission for Academic Year 2020-2021-from May 21-June11

2020/2021 கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் மே 21 முதல் ஜூன் 11 வரை ஏற்றுக்கொள்ளப்படுமென, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

2020 க.பொ.த. உயர் தரப் பரீட்சைகளின் முடிவுகளின அடிப்படையில், இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு 194,297 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்திருந்தது.

க.பொ.த. உயர் தரப் பரீட்சைகள் கடந்த வருடம் ஒக்டோபர் 22ஆம் திகதி முதல் நவம்பர் 06ஆம் திகதி வரை இடம்பெற்றது.

நாடு முழுவதிலுமுள்ள 2,648 பரீட்சை நிலையங்களில் இடம்பெற்ற இப்பரீட்சைகளுக்கு, புதிய பாடத்திட்டத்தில் 277,625 பேரும், பழைய பாடத்திட்டத்தில் 24,146 பேரும் என மொத்தமாக 301,771 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2020 க.பொ.த. உயர் தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாக 178,337 பேரும், பழைய பாடத்திட்டத்திற்கு அமைவாக 15,960 பேருமென மொத்தமாக 194,297 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளதாக இலங்கை பரீட்சை திணைக்களம் அறிவித்திருந்தது,

அதற்கமைய, பரீட்சைக்கு தோற்றிய 64.39% ஆன மாணவர்கள் பல்கலைக்கு தகுதி பெற்றுள்ளதாக, திணைக்களம் சுட்டிக்காட்டியிருந்தது.

Wed, 05/19/2021 - 15:46


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை