நைஜீரியாவில் 200 பேரை ஏற்றிய படகு முழ்கியதில் பலரும் மாயம்

வடமேற்கு நைஜீரிய நதி ஒன்றில் 200 பேருடன் பயணித்த படகு ஒன்று இரண்டாக உடைந்து மூழ்கிய சம்பவத்தில் பலரும் காணாமல்போயிருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

நைகர் மாநிலத்தில் இருந்து அண்டைய மாநிலமான கெப்பியை நோக்கி பயணித்த இந்தப் படகில் பெண்கள் மற்றும் சிறுவர்களே அதிகமாக இருந்துள்ளனர். இதுவரை 20 பேர் மீட்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றதே இந்த விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

நைகர் நதியில் இந்த விபத்து இடம்பெற்ற பகுதியில் சுழியோடிகள் மற்றும் அவசரப் பணியாளர்கள் உயிர் தப்பியோரை தேடி தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

‘வெறும் 20 பேர் மாத்திரமே உயிருடன் காப்பாற்றப்பட்டுள்ளனர். நால்வர் உயிரிழந்திருப்பது உறுதியாகியுள்ளது. எஞ்சி 156 பேரும் தொடர்ந்து காணாமல்போன நிலையில் உள்ளனர். அவர்கள் நீருக்கு அடியில் மூழ்கி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது’ என்று தேசிய உள்நாட்டு நீர்வழி அதிகாரசபையின் உள்ளூர் முகாமையாளர் யூசுப் பிர்மா ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

அதிக அளவான பயணிகளை ஏற்றிய இந்தப் படகில் தங்கச் சுரங்கத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட மணல் மூடைகளும் ஏற்றப்பட்டிருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் அருகாமை நகரில் ஐந்து சடலங்கள் கரை ஒதுங்கி இருப்பதாகவும் மேலும் சடலங்கள் கரைக்கு அடித்துவரப்படலாம் என்றும் அந்த நகரைச் சேர்ந்த காசிமு உமர் வாரா தெரிவித்துள்ளார்.

‘காணாமல் போனவர்களில் எனது சகோதரரும் இருக்கிறார். இந்த நதியில் ஏற்பட்ட மிக மேசமான விபத்து இதுவாகும்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

Fri, 05/28/2021 - 12:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை