மக்களுக்கு 2வது தடுப்பூசி பெற்றுக்கொடுக்கப்படும்

- அரசு முனைப்புடன் நடவடிக்கை என்கிறார் ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க

முதற்கட்டமாக எஸ்ட்ரா செனேகா தடுப்பூசியை பெற்றுக்கொண்ட அனைவருக்கும் இரண்டாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளில் அரசாங்கம் முனைப்புடன் செயற்பட்டு வரும் நிலையில் இத்தடுப்பூசியை பெற்றுக்கொள்வது கஷ்டமாக உள்ளதாக தடுப்பூசித் திட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

எஸ்ட்ரா செனேகா தடுப்பூசியை உற்பத்தி செய்யும் இந்தியாவில் சீரம் நிறுவனம் இந்தியாவின் தற்போதைய நிலைமை காரணமாக தடுப்பூசிகளை விநியோகிப்பதில் பெரும் அசௌகரியங்களை எதிர் கொண்டு வருகிறது. இந்தியாவின் தற்போதைய சூழ்நிலையில் அந்நிறுவனத்தினால் தயாரிக்கப்படும் தடுப்பூசி இந்தியாவுக்கே போதாமல் உள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொவெக்ஸ் நிறுவனத்திற்கு கூட அந்த தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முடியாத நிலையே காணப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையிலும் இலங்கை அரசாங்கம் இந்தியாவின் சீரம் நிறுவனத்திடம் முடிந்தளவு தடுப்பூசிகளை பெற்றுத்தருமாறு கோரியுள்ள போதும் அதனை வழங்க முடியாத நிலை அந்த நிறுவனத்திற்கு காணப்படுவதாகவும் ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கு போதிய நிதி அரசாங்கத்திடமுள்ளது என்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர், தடுப்பூசிகளை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளில் அரசாங்கம் தொடர்ச்சியாக முனைப்புடன் செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் சீரம் நிறுவனத்திடமிருந்து தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள தாமதம் ஏற்படுவதால், அரசாங்கம் வேறுசில நாடுகளிடமிருந்து அதனைக் கொள்வனவு செய்வதற்கான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Sat, 05/08/2021 - 12:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை