கொவிட்-19: பாகிஸ்தான் எல்லைகளுக்குப் பூட்டு

கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தின் தீர்க்கமான வாரங்களை எதிர்கொண்டிருப்பதாக அறிவித்திருக்கும் பாகிஸ்தான் ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைகளை மூடி இருப்பதோடு சர்வதேச விமானப்பயணங்களையும் குறைத்துள்ளது.

முஸ்லிம்களின் நோன்புப் பெருநாளுக்கு தயாராகி வரும் நிலையில் பாகிஸ்தானில் நகரங்கள் மற்றும் கிராமங்களை நோக்கி மக்களின் நடமாட்டம் அதிகரிக்கும் சூழலிலேயே கடந்த ஞாயிற்றுக்கிழமை அண்டை நாட்டு எல்லைகள் மூடப்பட்டுள்ளன.

அண்டை நாடான இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரம் அடைந்திருப்பது பற்றி பகிஸ்தான் உன்னிப்பாக அவதானித்து வருகிறது.

புதன்கிழமை தொடக்கம் 80 வீதமான விமானப் பயணங்கள் இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் சிவில் விமானசேவை நிர்வாகம் தெரிவித்துள்ளது. நோன்புப் பெருநாள் முடியும் மே நடுப்பகுதி வரை குறிப்பாக மத்திய கிழக்கில் இருந்து வரும் விமானங்களுக்கே இந்த கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது.

வர்த்தக செயற்பாடுகள் தவிர்த்து ஆப்கான் மற்றும் ஈரான் நாடுகளில் இரு எல்லையை கடப்பதும் தடுக்கப்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் கொரோனா கட்டுப்பாட்டு செயலணி தெரிவித்துள்ளது.

தினசரி இலட்சக்கணக்காக தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வரும் அண்டை நாடான இந்தியாவுடனான எல்லைகள் கொரோனாவுக்கு முன்னரே அரசில் பதற்றம் காரணமாக மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மூன்றாவது அலை பாதிப்பை எதிர்கொண்டிருக்கும் பாகிஸ்தானில் 800,000க்கும் அதிகமான நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு 18,000 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

Tue, 05/04/2021 - 14:46


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை