கண்டி மாவட்டத்தில் கொவிட் 19 சிகிச்சை நிலையங்களில் ஆக்ஸிஜன் உபகரணங்கள் தட்டுப்பாடு

கண்டி மற்றும் தெல்தெனியா கொவிட் 19 சிகிச்சை நிலையங்களில் நோயாளிகளுக்கு தேவையான ஆக்ஸிஜனை முற்றாக வழங்கும் வசதிகள் இல்லாததால் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தற்போது, கண்டி மற்றும் தெல்தெனியவில் உள்ள முக்கிய கொவிட் சிகிச்சை நிலையங்களுக்கு மட்டுமே ஆக்ஸிஜன் வசதி தேவைப்படுகிறது, ஆனால் ஆக்ஸிஜன் வசதிகள் இருந்தும் அதற்கான ஏனைய உபகரணங்கள், கட்டில்கள் இல்லாமையால் அதனை தகுந்த ’முறையில் செயற்படுத்த முடியாமல் சுமார் 35 நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தெல்தெனிய மற்றும் கண்டி கொவிட் சிகிச்சை நிலையங்களிலுள்ள தீவிர சிகிச்சை பிரிவுகள் தொற்றாளர்களால் நிரம்பி வழிகின்றன, மேலும் தெல்தெனியாவில் புதிதாக நிறுவப்பட்ட தீவிர சிகிச்சைப் பிரிவில் 4 கட்டில்களும் கண்டி மருத்துவமனையில் 06 கட்டில்களும் தொற்றாளர்களுக்கான அதி தீவிர சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. தற்போது, கொவிட் தொற்றாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட வார்ட் இலக்கம் 26 இல்  20 தொற்றாளர்களும் உடற்பயிற்சி சிகிச்சை பிரிவில் 50 தொற்றாளர்களும் காணப்படுவதோடு 15 நோயாளிகள் கடுமையான ஆக்ஸிஜன் தேவைகளைக் கொண்டுள்ளதாக  சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர். 

தெல்தெனிய மருத்துவமனையின் 120 நோயாளிகளில் மூன்றில் ஒரு பங்கினருக்கு ஆக்ஸிஜன் தேவைப்படுகின்றது. ஆக்சிஜன் வழங்க வசதிகள் இல்லாததால் 20 நோயாளிகள் ஆபத்தான நிலையில் உள்ளதோடு மூன்று நோயாளிகள் தெல்தெனிய மருத்துவமனையில் இறந்துள்ளனர். இறந்தவர்களின் உடல் கொவிட் தனிமைப்படுத்தப்பட்ட முறைகளுக்கமைய தகனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன.

பேராதெனிய மருத்துவமனையில் தற்போது 88 கொவிட் தொற்றாளர்கள் உள்ளனர். மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவிலுள்ள ஆறு கட்டில்களும் அதிதீவிர தொற்றாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

மேற்கண்ட ஆதாரங்களின்படி, இதுபோன்ற நிலைமையை எதிர்பார்த்து கொவிட் மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் விநியோக அலகுகளை வழங்குமாறு சுகாதார அமைச்சகம் ஆறு மாதங்களுக்கு முன்பே அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியிருந்தது. இருப்பினும், பேராதெனிய மருத்துவமனையில் 17, 18 மற்றும் 12 வார்ட்டுகளின் கொவிட் சிகிச்சை பிரிவு ஆக்ஸிஜன் வழங்கல் வசதிகளை மேம்படுத்தி சிகிச்சையைத் தற்போது தொடங்கியுள்ளது.

தற்போது தெல்தெனிய மருத்துவமனையில் 120 நோயாளிகளும், கண்டி மருத்துவமனையில் 70 பேரும், கடுகஸ்தொட்ட மருத்துவமனையில் 10 கர்ப்பிணித் தாய்மார்கள் உட்பட 30 நோயாளிகள் உள்ளனர்.

பேராதெனிய மருத்துவமனையில் 88 நோயாளிகளும், கடுகண்ணவ மருத்துவமனையில் 06 பேரும், வத்தேகம கொவிட் சிகிச்சை மையத்தில் 35 பேரும், அகுரன கொவிட் சிகிச்சை மையத்தில் 40 பேரும், நாவலப்பிட்டிய சிகிச்சை மையத்தில் 10 நோயாளிகளும் உள்ளனர்.

கொவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு ஆனால் எந்த அறிகுறிகளையும் காட்டாத 150  நோயாளிகளை கம்பளை இடைநிலை சிகிச்சை மையத்தில்  தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கண்டி தினகரன் சுழற்சி நிருபர்

Fri, 05/21/2021 - 15:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை