கொவிட் 19 தொற்று கட்டுப்படுத்தல் விவகாரம்; ஆளும் தரப்பு-எதிர்த்தரப்பு சபையில் கடும் வாக்குவாதம்

கொவிட்19 தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் ஆளும் தரப்பு அமைச்சர்களுக்குமிடையில் நேற்று சபையில் கடுமையாக வாக்குவாதம் நடைபெற்றது.

நிலைமையை கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் குற்றம்சாட்டியதோடு எதிரணி கொவிட்டை கட்டுப்படுத்த ஒத்துழைக்காது விமர்சனம் மட்டும் செய்வதாக ஆளும் தரப்பில் பதில் வழங்கப்பட்டது.

பாராளுமன்றத்தில் நேற்று நிலையியற் கட்டளை 27/2இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார். இதனையடுத்தே சபையில் சர்ச்சை ஏற்பட்டது.

அவருக்கு கொவிட்19 வைரஸ் அல்ல, கொவிட்19 பைத்தியம் பிடித்திருக்கின்றதென ஆளும் தரப்பு பிரதம கொரடா அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணாந்து கடுமையாக விமர்சித்தார். ஆனால் கொவிட்19 தொற்றினால் மக்களின் உயிர்களை பாதுகாக்கும் பைத்தியம் எனக்கு இருக்கின்றதென்று சஜித் பிரேமாச குறிப்பிட்டார்.

நிலையியற் கட்டளை 27/2இன் கீழ் கொவிட்19 தொற்றினால் அதிகரித்துச்செல்லும் மரணங்கள், பீ.சீ.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படும் எண்ணிக்கை மற்றும் தடுப்பூசி ஏற்றி முடிக்க இருக்கும் கால எல்லை குறித்து வினா எழுப்பிய அவர் மேலும் தெரிவித்ததாவது.

கொவிட் 19 கட்டுப்படுத்தும் முயற்சி சுகாதார துறையினரின் கைகளை விட்டுச்செல்லும் நிலை ஏற்பட்டுவருவதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.கொவிட்19 நாட்டுக்குள் வருவதற்கு முன்பிருந்தே அதுதொடர்பில் மேற்கொள்ளவேண்டிய அறிவுறுத்தல்கள் மற்றும் எச்சரிக்கைகளை இந்த சபையில் விடுத்திருந்தோம். அப்போது அரச தரப்பினர் எம்மை விமர்சித்தனர். முகக்கவசம் தேவையில்லை, தடுப்பூசி அவசியமில்லையென பதிலளித்தார்கள்.

அத்துடன் கொவிட் 19 கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் முறையற்ற வேலைத்திட்ட காரணமாக இன்று மரணங்கள் அதிகரித்து செல்கின்றன. தொற்றாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றனர். மக்களின் உயிர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்ட போது எமக்கு பைத்தியம் என்றார்கள். மக்களை கொவிட்19 தொற்றிலிருந்து பாதுகாப்பதில் எனக்கு பைத்தியம் பிடித்திருக்கின்றது என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன்.

அஸ்ட்ரா செனெகா, ஸ்புட்னிக் தடுப்பூசிகளை ஆரம்பத்தில் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்தபோது, அதுதொடர்பில் அலட்சியமாக இருந்த அரசாங்கம், தற்போது அதிகூடிய விலையில் அதனை பெற்றுக்கொண்டிருக்கின்றது. அஸ்ட்ரா செனெகா முதலாம் கட்டமாக ஏற்றியவர்களுக்கு அதன் இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்குவதற்கு, தேவையான தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை. அதனால் இரண்டாம் கட்ட தடுப்பூசி எப்போது ஏற்றப்படும் என்று நிச்சயம் இல்லாமல் காணப்படுகிறது என்றார்.

இதன்போது, எழுந்த அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, சுகாதார அமைச்சர் என்றவகையில் கொவிட் 19 கட்டுப்படுத்த அர்ப்பணிப்புடன் வேலைத்திட்டங்களை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம். அதற்காக எனது முழு நேரத்தையும் நான் செலவிட்டு செற்படுகின்றேன். எதிர்க்கட்சித் தலைவர் இதுதொடர்பாக தொடர்ந்து சபையில் கேள்வி கேட்பது, கொவிட் 19 கட்டுப்படுத்த அர்ப்பணிக்கும் எனது காலத்தை குழப்புவதற்கான முயற்சியா? என்ற சந்தேகம் எழுகின்றது. அத்துடன் கொவிட் 19 தொடர்பாக கேள்வி கேட்பதைவிட களத்தில் இறங்கி அதற்காக பாடுபடவேண்டுமென்றார்.

இதற்கு சஜித் பிரேமதாச பதிலளிக்கையில், கொவிட் 19ஐ கட்டுப்படுத்த களத்திலிருந்து பணியாற்ற சுகாதார அமைச்சர் எனக்கு கற்றுத்தர தேவையில்லை. அரசாங்கம் செயற்படுவதற்கு முன்னர் எதிர்க்கட்சி என்ற வகையில் நாங்கள் களத்தில் இறங்கி செயற்பட்டு வருகின்றோம். தேவையான தடுப்பூசிகளை வெளிநாடுகளிலிருந்து பெற்றுக்கொள்ள வெளிநாட்டு தூதுவர்களுடன் கலந்துரையாடி அவற்றை பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.

நாங்கள் எதனையும் செய்யவில்லையென அமைச்சர் ஜோன்ஸ்டன் தெரிவிக்கின்றார். நாங்கள் கொவிட்19 ஆரம்பத்தில் இருந்து செய்துவரும் வேலைத்திட்டங்களை ஒப்புவிக்க முடியும். அவ்வாறு இல்லாவிட்டால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விட்டுச்செல்ல நான் தயார் என்ற சவாலை அவருக்கு விடுக்கின்றேன். அவ்வாறு இல்லாவிட்டால் அவர் பாராளுமன்ற பதவியை துறக்கவேண்டும் என்ற சவாலை ஏற்றுக்கொள்வாரா என வினவினார்.

ஷம்ஸ் பாஹிம்,நிசாந்தன் சுப்பிரமணியம்

Wed, 05/19/2021 - 10:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை