மட்டக்களப்பு மாவட்டத்தில் 192 பேர் கால்களை இழந்துள்ளனர்

- செயற்கை கால் வழங்கும் நிகழ்வில் செஞ்சிலுவை சங்க மட்டு. கிளைத் தலைவர்

மட்டக்களப்பு மாவட்டத்திலே பல்வேறு காரணங்களால் சுமார் 859 பேரின் கால்கள் பாதிப்புற்ற மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். அதில் 192 பேர் ஒருகால் அல்லது இரண்டு, கால்களையும் இழந்துள்ளனர். இவர்களுள்  14 பேருக்கு மாத்திரம்தான் செயற்கைக் கால்களை வழங்கியுள்ளோம். மிகுதியாகவுள்ள கால்களை இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு, செயற்கைக் கால்களை வேண்டியுள்ளது என இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைத் தலைவர் த.வசந்தராசா தெரிவித்துள்ளார்.

டென்மார்க் நாட்டில் அமைந்துள்ள வாணி சமூக பொருளாதார சுயமேம்பாட்டு நிறுவனத்தின் நிதி அனுசரணையில் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் ஆதரவுடன், மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட கடந்த காலங்களில் பல்வெறு காரணங்களினால் கால்களை இழந்த 14 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்களை வழங்கி வைக்கும் நிகழ்வு மட்டக்களப்பு வெல்லாவெளியில் அமைந்துள்ள பொதுநோக்கு மண்டபத்தில் புதன்கிழமை (28) இடம்பெற்றது.

போரதீவுப்பற்று பிரதேச கதிரவன் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் செயலாளர் நா.பிரதீபராஜா தலைமையில் சுகாதார விதி முறைகளுக்கமைவாக நடைபெற்ற இந்நிகழ்வில், போரதீவுப் பற்று பிரதேச செயலாளர் ஆர்.இராகுலநாயகி  மற்றும்  மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது  மாற்றுத்திறனாளிகளுக்கு புதிதாக செயற்கைக் கால்கள் வழங்கி வைக்கப்பட்டன. இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது கம்போடியாவின் தரத்துக்கு ஏற்ப செயற்கை கால்களை, மன்னாரில் அமைந்துள்ள வாழ்வோதையம் அமைப்பினர் இந்த செயற்கை கால்களை தயாரித்துத் தந்துள்ளார்கள். இந்த நல்ல காரியத்திற்கு டென்மார்க்கில் அமைந்துள்ள வாணி எனும் சகோதரி நிதி உதவி செய்துள்ளார். பல இன்னல்களைத் தாங்கிக் கொண்டு வாழ்ந்து வரும் இவ்வாறான மாற்றுத்திறனாளின் வாழ்வாதாரத்திற்கு மேலும் உதவ வேண்டும் என்பதோடு, மிகுதியாகவுள்ள கால்களை இழந்தவர்களுக்கும் செயற்கை கால்களை பொருத்துவதற்கு தனவந்தர்கள் முன்வரவேண்டும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

(பெரியபோரதீவு தினகரன் நிருபர்)  

Sat, 05/01/2021 - 12:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை