பிராந்திய மருத்துவமனைகளை கொவிட்-19 சிகிச்சை நிலையங்களாக மாற்ற தீர்மானம்

மத்திய மாகாணத்தில்,கொவிட் நோயாளர்களுக்கென, 12 பிராந்திய மருத்துவமனைகளை தயார்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே தலைமையில் நடந்த கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரானா பரவலின் தீவிரம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

சமீபத்தில் பெறப்பட்ட பி.சி.ஆர் இயந்திரத்திற்கு மேலதிகமாக, புதிய பி.சி.ஆர் இயந்திரத்தைக் கொள்வனவு செய்தல், பிரதான மருத்துவமனைகளுக்கு அருகிலுள்ள மேலும் 12 மருத்துவமனைகளை கொவிட் சிகிச்சை நிலையங்களாக பயன்படுத்தல், கொவிட் 19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கத் தேவையான சிற்றூழியர்கள், ஏனைய ஊழியர்களை உள்வாங்கல் போன்ற தீர்மானங்கள் இதில் எடுக்கப்பட்டன.

இதன்மூலம் மேலும் 1456 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இதே நேரம் பல்லேகலையிலுள்ள மாகாண விவசாய அமைச்சில் நடத்தப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தை, பொல்கொல்லைக்கு மாற்றவும் முடிவு செய்யப்பட்டது.

மாகாண பிரதம செயலாளர் காமினி ராஜரத்ன, மாவட்ட செயலாளர்கள், ஆளுநரின் செயலாளர் அன்டன் திலகரத்ன மற்றும் மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பாதுகாப்பு படைகளின் பிரதானிகள், சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

அக்குறணை குறூப் நிருபர்

Mon, 05/03/2021 - 12:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை