அதிகரித்துவரும் கொரோனா பரவலே மே தினத்தை நிறுத்த காரணம்

- அமைச்சர் காமினி லொக்குகே விளக்கம்

கொரோனா தொற்று வேகமாக பரவி தற்போது கட்டுப்பாட்டை இழந்துள்ள நிலையில், இலங்கையில் இன்று 300 பேர்வரை சராசரியாக கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டதால், மே தினத்தை நிறுத்துவதற்கான தீர்மானம் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டதென போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி நேற்று (23) பத்தரமுல்லை வோட்டர்ஸ் ஏட்ஜ் விடுதி வளாகத்தில் நடத்திய ஊடக சந்திப்பில் பேசும் போதே அமைச்சர் லொக்குகே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மே தினம் பற்றிய கலந்துரையாடல் அண்மையில் நடைபெற்றது. மே தினக் கூட்டத்தை நடத்துவதற்கான அனுமதி இதற்கு முன் வழங்கப்பட்டது. எனினும் இதனிடையே கொரோனா ஒழிப்பு ஜனாதிபதி செயலணி அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளை அழைத்து பேச்சு நடத்தியது. அதில் அனைவரும் பங்கேற்றனர். சிங்கள - தமிழ் புத்தாண்டிற்கு முன், பின்னர் உள்ள நிலைமையை இராணுவத் தளபதி தெளிவுபடுத்தினார். இறுதியில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை அறிவுறுத்தி தீர்மானத்தை எடுக்கும்படி கூறியபோது ஜனாதிபதி செயலணி இறுதிமுடிவை எடுக்கும்படி கோரப்பட்டது. அதன்போது கொரோனா தொற்று வேகமாக பரவிவருவதால் இந்தியாவை ஒப்பீடு செய்து தற்போது கட்டுப்பாட்டை இழந்த நிலையில், இன்று இலங்கையில் 300 பேர்வரை சராசரியாக இனங்காணப்பட்டதால், மே தினத்தை நிறுத்துவதற்கான தீர்மானம் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனினும் ஐக்கிய தேசியக்கட்சி பொதுச் செயலாளர், அரச தலையீட்டினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவித்தார். அன்று ஜனாதிபதி செயலணி எடுத்த முடிவின் பின்னர் இன்று கட்டுப்பாட்டை இழந்து செல்கிறது. தற்போதுவரை குருநாகலில் சில இடங்கள் மூடப்பட்டுள்ளதோடு எதிர்வரும் நாட்களில் மேலும் சில நகரங்கள் மூடப்படலாம். யதார்த்தத்தை ஊடகங்கள் வாயிலாக அரசாங்கம் அறிவிக்கின்றது என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Sat, 04/24/2021 - 13:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை