கண்டி மாவட்டத்தில் புதிய கொரோனா வைரஸ்

- பாடசாலைகளில் மாணவர் வரவு மந்தம்

சிங்கள - தமிழ்  புத்தாண்டை அடுத்து பரவியுள்ள கொரோனா வைரஸ் மாதிரிகளை அவதானித்த போது கண்டிமாவட்டத்தில் பெறப்பட்ட மாதிரிகளிலும் சில புதுத்தன்மைகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின், ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் நுண் உயிரியல் துறைத் தலைவர் டாக்டர் சந்திமா ஜிவந்தர வெளியிட்டுள்ள அறிக்கையில் இதுபற்றித் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் பெரும்பாலும் பிரிட்டனில் பரவியுள்ள வைரஸுடன் ஒத்ததாக இருக்க சந்தர்ப்பம் இருக்கின்றது.  நாட்டில் வைரஸ் பரவுவதில் சில புதிய பிறழ்வுகள் இருப்பதாகவும், அதன் காரணமாக வைரஸ் விரைவாக பரவுவதற்கான அறிகுறிகளைக் காட்டுவதாகவும் டாக்டர் ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

இது பிரிட்டிஷ் இனமாதிரியை ஒத்ததா  அல்லது இலங்கையில் உருவான ஒரு மாறுபட்ட இனமான  என்பதை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளதாகவும்  அவர் தெரிவித்துள்னார்.  மேலும் இது இந்தியாவில் பரவும்  வைரஸ் மாதிரியை ஒத்ததா? என இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மத்திய மாகாணத்தில்    கொவிட் -19  தொற்றாளர்களின் எண்ணிக்கை 8677  ஆக உயர்ந்துள்ளதாக மத்திய மாகாண சுகாதார திணைக்களம்  தெரிவித்துள்ளது. அதுவும் மத்திய மாகாணத்தில் அதிக எண்ணிக்கையிலான  கொவிட் -19  தொற்றாளர்கள் கண்டி மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.  அதன்படி கண்டி மாவட்டத்திலிருந்து   5449பேர் பதிவாகியுள்ளனர்.  அதுபோன்று   நுவரெலியா மாவட்டத்தில்  1721தொற்றாளர்களும், மாத்தளை மாவட்டத்தில்  1507  தொற்றாளர்களும்   பதிவாகியுள்ளனர்.

நேற்று முன்தினம்  (26) காலை 6.00மணிக்கு முடிவடைந்த கடந்த 24மணி நேரத்தில் மாகாணத்திற்குள்  84புதிய தொற்றாளர்கள்  பதிவாகியுள்ளனர்.  அதன்படி கண்டியிலிருந்து 82, பேரும் நுவரெலியாவில் இருந்து 67, மாத்தளைலிருந்து 60. பேரும்  புதிய தொற்றாளர்களாக  பதிவாகியுள்ளனர்.

மேலும்  மத்திய மாகாணத்தில்   கண்டி மாவட்டத்திலேயே கொரோனா தொற்று காரணமாக அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அதன்படி கண்டி மாவட்டத்தில்    இதுவரை  68பேரும்  மாத்தளை மாவட்டத்தில் 11பேரும்  மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் 12பேருமாக  மொத்தம்  91    பேர்    உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலைமை காரணமாக மத்திய மாகாண பாடசாலைகளில் நேற்று (27)  மாணவர்களின் வருகை  கணிசமான அளவு குறைந்துள்ளதாக மத்திய மாகாண கல்விப்  பணிப்பாளர்  திலக் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். நகர்ப்புற பாடசாலைகளில் மாணவர்களின்   வருகை சுமார் 25% வீதமாகவும்  கிராமப்புற பாடசாலைகளில் மாணவர்களின்  வருகை  70 சதவீதமாக இருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார். சுமார் 80 சதவீத ஆசிரியர்களே  நேற்று  கடமைக்கு சென்றுள்ளதாகவும் அவர்  தெரிவித்தார்.

எம்.ஏ.அமீனுல்லா - அக்குறணை குறூப் நிருபர்

Wed, 04/28/2021 - 14:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை