முன்னாள் நிறைவேற்றுக்குழு தவறிழைத்திருப்பின் சட்ட நடவடிக்கை எடுக்கவும்

- அமைச்சின் செயலாளருக்கு கோப் குழு பணிப்பு

ஸ்ரீ லங்கா கிரிகெட் நிறைவேற்றுக்குழுவின் முன்னாள் உறுப்பினர்கள் தவறிழைத்திருந்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (06) விளையாட்டுத் துறை அமைச்சின் செயலாளருக்குப் பணிப்புரை விடுத்தது. இது தொடர்பில் சட்ட மாஅதிபரின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித்த ஹேரத் தெரிவித்தார்.  

ஸ்ரீ லங்கா கிரிகெட் நிறுவனத்தின் 2017மற்றும் 2018நிதி ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் அதன் செயற்றிறன் தொடர்பில் ஆராயும் நோக்கில் கோப் குழு கூடியிருந்தது. இதில் அமைச்சர்களான மஹிந்த அமரவீர, மஹிந்தானந்த அளுத்கமகே இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, இரான் விக்ரமரட்ன, எஸ்.எம்.மரிக்கார், நளின் பண்டார, பிரேம்நாத்.சி.தொலவத்த, எஸ்.இராசமாணிக்கம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.  

ஸ்ரீ லங்கா கிரிகெட் நிறுவனத்தின் அனுமதிக்கப்பட்ட பணியாட் தொகுதி 162ஆகக் காணப்படும் நிலையில் இவற்றில் 123பதவிநிலைகள் ஒப்பந்த அடிப்படையில் காணப்படுவது பிரச்சினைக்குரியது என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.  

ஸ்ரீ லங்கா கிரிகெட் நிறுவனத்தின் கொள்முதல் செயற்பாடுகள் முறையற்ற விதத்தில் காணப்படுவதுடன், இதனை ஒழுங்குபடுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் கோப் குழு பரிந்துரைத்தது. விளையாட்டுத்துறைப் பணிப்பாளர் நாயகத்தின் தலையீடு தற்பொழுது இருக்கும் நிலையைவிட அதிகமாக இருக்க வேண்டும் என்பது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.  

விளையாட்டுக் கழகங்களுக்கு நிதிகளை வழங்குவது தொடர்பில் ஸ்ரீ லங்கா கிரிகெட் உரிய பொறிமுறையொன்றை உருவாக்க வேண்டும்.

அத்துடன், விளையாட்டு சட்டத்தை விரைவில் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோப் குழு பரிந்துரைத்தது.  

இலங்கையில் கிரிக்கட் விளையாட்டின் வீழ்ச்சிக்கு வீரர்களின் தவறு காரணம் அல்ல, கிரிக்கெட் நிர்வாகத்தின் பலவீனமே காரணம் என்றும் பேராசிரியர் சரித்த ஹேரத் சுட்டிக்காட்டினார்.   இக்கூட்டத்தில் ஸ்ரீ லங்கா கிரிகெட்டின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.   

Thu, 04/08/2021 - 08:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை