உலகில் கொரோனா உயிரிழப்பு மூன்று மில்லியனை தாண்டியது

கொரோனா தொற்றினால் உலகெங்கும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை நேற்று 3 மில்லியனைத் தாண்டியதாக ரோய்ட்டர்ஸ் தரவுகள் காட்டுகின்றன. இந்த வைரஸ் பரவல் பல நாடுகளிலும் மீண்டும் அதிகரித்து உலகெங்கும் தடுப்பு மருந்து வழங்குவதில் சவால் இருந்துவரும் நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக இந்தியா மற்றும் பிரேசிலில் கொவிட்–19 உயிரிழப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. பிரிட்டன் மற்றும் தென்னாபிரிக்காவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் திரிபு மற்றும் சமூகக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது நோய் பரவல் அதிகரிப்புக்கு காரணம் என்று சுகாதார தரப்பினர் குறிப்பிடுகின்றனர்.

ரோய்ட்டர்ஸ் தரவுகளின்படி, கொரோனா தொற்று உயிரிழப்பு எண்ணிக்கை 2 மில்லியனை எட்டுவதற்கு ஓர் ஆண்டு மேல் காலம் எடுத்துக்கொண்ட நிலையில் அது 3 மில்லியனை எட்ட சுமார் மூன்று மாதங்களே எடுத்துக்கொண்டுள்ளது.

தினசரி புதிய உயிரிழப்பு எண்ணிக்கையில் பிரேசில் முன்னிலை பெற்றிருப்பதோடு ஒவ்வொரு நாளும் இடம்பெறும் ஒவ்வொரு நான்கு உயிரிழப்புகளில் ஒன்று பிரேசிலில் பதிவாகிறது.

பிரேசிலில் மருத்துவ கட்டமைப்பு நிலைகுலையும் மிக ஆபத்தான சூழலில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

மறுபுறம் இந்தியாவில் கடந்த திங்கட்கிழமை சாதனை எண்ணிக்கையாக கொரோன தொற்று சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அமெரிக்காவுக்கு அடுத்து ஒரே நாளில் 100,000 அதிகமான புதிய தொற்றுச் சம்பவங்கள் பதிவான நாடாக இது இடம்பிடித்துள்ளது.

இந்தியாவில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலமான மஹாராஷ்ட்ராவில் வணிக வளாகங்கள், திரையரங்குகள், மதுபான விடுதிகள், உணவகங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டிருப்பதோடு மருத்துவமனைகளில் நோயாளர்கள் நிரம்பி வழிகின்றனர்.

51 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய பிராந்தியத்தில் சுமார் 1.1 மில்லியன் மொத்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இதில் பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஜெர்மனியில் 60 வீத உயிரிழப்பு இடம்பெற்றுள்ளது.

எந்த ஒரு நாட்டை விடவும் அதிக உயிரிழப்பாக அமெரிக்காவில் 550,000 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இது உலகெங்கும் பதிவான அனைத்து கொரோனா தொற்று உயிரிழப்புகளில் 19 வீதமாக உள்ளது. கடந்த மூன்று வாரங்களில் தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்தபோதும் நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் விரைவான தடுப்பு மருந்து வழங்கும் திட்டம் உயிரிழப்புகளை தவிர்க்கும் என்று சுகாதார அதிகாரிகள் நம்புகின்றனர். அமெரிக்க மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் ஒரு முறையேனும் தடுப்பு மருந்தை பெற்றுள்ளனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை உலக மக்கள் தொகையில் 4.75 வீதமான குறைந்தது 370.3 மில்லியன் மக்கள் ஒரு முறையேனும் தடுப்பூசியை பெற்றிருப்பதாக அது பற்றிய தரவுகளை வெளியிடும் அமைப்பு ஒன்று குறிப்பிட்டுள்ளது.

Wed, 04/07/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை