நாசாவின் ஹெலி செவ்வாயில் வெற்றிகரமாக பறந்து சாதனை

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, இன்ஜினியுட்டி என்ற சிறிய ஹெலிகொப்டரை செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறக்கவிட்டுள்ளது.

இந்த ஆளில்லா விமானம் ஒரு நிமிடத்திற்கு குறைவான நேரம் வானில் பறந்ததை அடுத்து, வேற்றுக் கிரகம் ஒன்றில் இயக்கப்பட்ட முதல் விமானம் என வரலாறு படைத்தது.

சுமார் 1.8 கிலோகிராம் எடையுள்ள அந்த ஹெலி, சுமார் 3 மீற்றர் உயரத்திற்குப் பறந்தது. அது சுழன்று, 39.1 வினாடிகளுக்குப் பின் தரையிறங்கியது.

அதன் மூலம் எடுக்கப்பட்ட தகவல்களும் படங்களும் 289 மில்லியன் கிலோமீற்றர் கடந்து, சுமார் மூன்றரை மணி நேரத்திற்குப் பின் பூமியில் உள்ள நாசா கட்டுப்பாட்டகத்திற்கு கிடைத்தது.

அந்த ஹெலி பயணத்திற்காகக், கடந்த 6 ஆண்டுகளாகத் திட்டமிடப்பட்டது. அதன் வெற்றி, முதல் விமானத்தை உருவாக்கிப் பறக்கச் செய்த ரைட் சகோதரர்களின் தருணத்திற்குச் சமம் என்று கூறப்படுகிறது.

1903ஆம் ஆண்டில் அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தில் ரைட் சகோதரர்கள் பூமியில் முதல் விமானத்தை இயக்கினர்.

இன்ஜினியுட்டி ஹெலிகொப்டரின் கீழ் ஒரு கறுப்பு வெள்ளை கெமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த கெமரா வழிகாட்டும் பயன்பாட்டுக்காக பொருத்தப்பட்டது. இந்த கெமராவிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு படம் நாசாவுக்குக் கிடைத்துள்ளது. அப்படம் இன்ஜினியுட்டியின் நிழலைக் காட்டுகிறது.

இன்ஜினியுட்டி கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் பெர்செவெரன்ஸ் ரோவரின் உதவியுடன் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அது செவ்வாய் கிரகத்தின் ஜெசெரோ பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம் தரையிறங்கியது.

Wed, 04/21/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை