வடமாகாண சுகாதார தொண்டர்களை ஒரு இலட்சம் வேலைவாய்ப்பில் உள்ளீர்க்க உறுதி

- ஜனாதிபதி உறுதி

வடக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக சுகாதார தொண்டர்களாக பணியாற்றி நிரந்தர நியமனமின்றி நடுத்தெருவில் நிற்கும் சுகாதாரத் தொண்டர்களை ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு திட்டத்திற்குள் உள்ளீர்த்து அவர்களுக்கான நியமனத்தை வழங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று முன்தினம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களுடனான சந்திப்பின் போதே வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களுக்கு நியமனம் வழங்குவது தொடர்பான தீர்மானம் எட்டப்பட்டது.

இதன்போது, யாழ்.மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர் அங்கஜன், வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்கள் பலர் யுத்த, இடர் காலங்களில் கூட அர்ப்பணிப்புடன் சேவையாற்றியுள்ளனர். அவர்களுக்கு கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் நியமனம் வழங்கப்பட்டு பின்னர் அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் அவர்கள் நீதி கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களின் நியமனம் தேர்தல் காலத்தில் வழங்கப்பட்டிருந்தாலும் கூட அவர்களுடைய சேவை மற்றும் குடும்ப நிலைமையை கவனத்தில் கொள்ள வேண்டும் என சுட்டிக்காட்டினார்.

இதனைத் தொடர்ந்து சுகாதார தொண்டர்களை ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு திட்டத்திற்குள் உள்ளீர்த்து நியமனம் வழங்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளார்.

சாவகச்சேரி விசேட நிருபர்

Sat, 04/03/2021 - 10:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை