கால்நடைகளை கட்டுப்படுத்தி நெற் செய்கைக்கு உதவ வேண்டுகோள்

கிளிநொச்சி, அக்கராயன் குளத்தின் கீழான சகல கால்நடைகளையும் கட்டுப்படுத்தும்படி நாகதம்பிரான் கமக்கார அமைப்பின் தலைவர் சி. கனகசபாபதி அறிவித்துள்ளார்.

நேற்று (14) முதல் கால்நடைக் கட்டுப்பாடுகள் தொடங்கி உள்ளதாகவும் சிறுபோக நெற்செய்கையில் பள்ளமான காணிப் பகுதிகளில் விதைப்புகள் நிறைவு பெற்றுள்ளதாகவும் எனவே கால்நடை வளர்ப்பாளர்கள் தமது கால்நடைகளை பயிர்ச் செய்கை நிலங்களுக்குள் அனுமதிக்க வேண்டாம் எனவும் கால்நடைகளைக் கட்டுப்படுத்தி சிறுபோக நெற்செய்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும்படியும் அறிவித்துள்ளார்.

இதேவேளை அக்கராயன் பிரதேசத்தில் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட கால்நடைகள் காணப்படுகின்ற போதிலும் இக்கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரவைகள் இனங்காணப்படாததன் காரணமாக கால்நடைகளை மேய்ச்சலில் ஈடுபடுத்துவதில்; கால்நடை வளர்ப்பாளர்கள் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.

திருமுறிகண்டி, அக்கராயன், வன்னேரிக்குளம் வீதியில் தற்காலிக மேய்ச்சலுக்கு இனங்காணப்பட்ட இடங்களில் கூடுதலாக பயிர்ச் செய்கைகள் இடம் பெறுவதாகவும் பாலங்குளத்தின் கீழ் நெற்செய்கை இடம் பெறுகின்றது.

அக்கராயனில் இருந்து வன்னேரிக்குளம் பல்லவராயன்கட்டுச் சந்தி வரை வீதி புனரமைப்புகள் இடம் பெறுவதன் காரணமாக கால்நடைகளை மேய்ச்சலில் ஈடுபடுத்துவதிலும் கால்நடை வளர்ப்பாளர்கள் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.

(முல்லைத்தீவு குறூப் நிருபர் - ந. கிருஸ்ணகுமார்)

Thu, 04/15/2021 - 14:16


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை