கிழக்கு ஜெரூசலத்தில் மோதல்: பலரும் காயம்

தீவிர வலதுசாரி யூதச் செயற்பாட்டாளர்கள், பலஸ்தீனர்கள் மற்றும் இஸ்ரேலிய பொலிஸாருக்கு இடையே கிழக்கு ஜெரூசலத்தில் இடம்பெறும் கடும் மோதல்களில் பலர் காயமடைந்துள்ளனர்.

அந்த நகரின் டமஸ்கஸ் வாயில் பகுதியில் கடந்த வியாழக்கிழமை மாலை ‘அரபிகள் ஒழிக’ என்று கோசமெழுப்பியடி வந்த நூற்றுக்கணக்காக தேசியவாத யூதர்கள் அங்கிருந்த பலஸ்தீன ஆர்ப்பாட்டக்காரர்களுடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

அதிர்ச்சி அளிக்கக்கூடிய கையெறி குண்டுகள், கண்ணீர் புகைப்பிரயோகத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பயன்படுத்திய இஸ்ரேலிய பொலிஸார் இந்த இரு தரப்பினரையும் விலக்கி வைக்க முயன்றனர். இதன்போது பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வன்முறைகளில் குறைந்தது 100 பலஸ்தீனர்கள் காயமடைந்ததாகவும் 21 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டி ஏற்பட்டதாகவும் பலஸ்தீன செம்பிறை சங்கம் தெரிவித்துள்ளது.

டமஸ்கஸ் வாயிலுக்கு வெளியே வழக்கமாக இடம்பெறும் தமது ரமழான் மாத ஒன்றுகூடலை பொலிஸார் தடுக்க முயன்றதாக பலஸ்தீனர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

‘அனைத்து வகையான வன்முறை மற்றும் கலகங்களுக்கு எதிராகவும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று இஸ்ரேலிய பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன பிரச்சினையின் மையப்புள்ளிகளில் ஒன்றாக ஜெரூசலத்தின் உரிமை பற்றிய விவகாரம் நீடித்து வருகிறது. இந்த நகரில் குறிப்பாக கிழக்கு ஜெரூசத்தில் யூத, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய புனிதத் தலங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sat, 04/24/2021 - 11:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை