யாழில் வறிய குடும்பத்துக்கு படையினர் வழங்கிய வீடு

இராணுவத் தளபதியால் நேரில் கையளிப்பு

பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியும், கொவிட் -19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா யாழ்ப்பாணத்துக்கான தனது விஜயத்தின் போது யாழ்ப்பாணத்தின் கிராண்ட் பஜாரில் இராணுவத்தால் வறிய குடும்பத்திற்காக கட்டப்பட்ட புதிய வீட்டை கையளித்தார்.

யாழ். பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவின் அழைப்பின் பேரில் நிகழ்வில் கலந்துகொண்ட ஜெனரல் ஷவேந்திர சில்வா, இராணுவத்தால் கட்டப்பட்ட வீட்டின் சாவியை பயனாளியான திருமதி. கருணாநிதி ஜெகதிஷ்வரனுக்கு வழங்கினார்.

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் படையினர், இந்த புதிய வீட்டைக் கட்டுவதற்கு தொழில்நுட்ப, பொறியியல் மற்றும் மனிதவள ஒத்துழைப்பை வழங்கினர். கிராம சேவகர் மற்றும் வீடமைப்பு அதிகாரிகளின் பரிந்துரையின் பேரில் யாழ்ப்பாணத்திலுள்ள பிரதேச செயலகத்தால் கட்டுமானத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. 512 ஆவது பிரிகேட் தளபதியின் மேற்பார்வையின் கீழ் கட்டுமானப் பணிகளுக்கு மிகவும் தேவையான மனித வலுவை 14 ஆவது கஜபா படையணியின் படையினர் வழங்கியதுடன், புத்தாண்டு தினத்தில் வீடு நிறைவு பெற்றது.

மாவட்ட செயலாளர், யாழ் மாவட்ட மேலதிக செயலாளர், யாழ்ப்பாண காணி அதிகாரிகள், 51ஆவது படைப் பிரிவு தளபதி, 511 மற்றும் 512 படைப்பிரிவுத் தளபதிகள் , மூத்த அதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் கட்டுமானத்தில் பங்களித்த படையினர் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி திறப்பு விழா நிகழ்வில் கலந்துகொண்டனர்.

யாழ்.குறூப் நிருபர்

Sat, 04/17/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை