இஸ்ரேல் அணு நிலையத்திற்கு அருகே சிரியா ஏவுகணை வீச்சு

இஸ்ரேலின் இரகசிய அணு தளம் ஒன்றில் இருந்து 30 கிலோமீற்றருக்கு அப்பால் தெற்கு இஸ்ரேலில் சிரியாவின் விமான எதிர்ப்பு ஏவுகணை ஒன்று விழுந்து வெடித்துள்ளது.

டிமோனா பகுதியை நோக்கி பாய்ந்த ஏவுகணை வெடிப்பதற்கு முன்னர் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டுள்ளது. இதனால் எந்த பாதிப்பு ஏற்பட்டதாக உறுதி செய்யப்படவில்லை.

இஸ்ரேல் விமானத்தை நோக்கி வீசப்பட்ட பல ஏவுகணைகளில் ஒன்றே இவ்வாறு விழுந்து வெடித்திருப்பதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. இஸ்ரேலின் வான் தாக்குதல்களுக்கு பதில் நடவடிக்கையாக சிரியாவில் வான் பாதுகாப்பு முறை இயக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிரிய தலைநகர் டமஸ்கஸை சூழவுள்ள பகுதியை இஸ்ரேல் ஏவுகணைகள் இலக்கு வைத்ததாக சிரிய இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

இதில் பெரும்பாலான ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டபோதும், இதனால் நான்கு சிரிய படையினர் காமடைந்திருப்பதோடு பொருட் சேதமும் ஏற்பட்டிருப்பதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

டமஸ்கஸின் வட கிழக்காக 40 கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் துமைர் நகரில் இருக்கும் பாதுகாப்பு தளத்தை இலக்கு வைத்தே இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதல் இடம்பெற்றதாக சிரிய மனித உரிமை கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

இங்கு ஈரான் ஆதரவு போராளிகளின் ஆயுதக் கிடங்கு இருப்பதாக நம்பப்படுகிறது. ஈரானிய அணு நிலையம் மீதான அண்மைய நாச வேலையை அடுத்து இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான பதற்ற சூழல் மேலும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலின் டிமோனா அணு நிலையத்தில் அணு ஆயுதம் தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்தக் கூற்றை இஸ்ரேல் இதுவரை ஏற்கவோ அல்லது மறுக்கவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Fri, 04/23/2021 - 10:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை