தடுப்பூசியேற்றிய மூவர் குருதி உறைவால் மரணம்

சஜித்தின் கேள்விக்கு பவித்ரா பதில்

கொவிட்19 தொற்றுக்கு எதிராக தடுப்பூசியை செலுத்திக் கொண்ட மூன்று பேர் இரத்த உறைவு காரணமாக இலங்கையில் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கொவிட்19 தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்களுக்கு உயிர் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா என (27/2) கீழ் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், எக்ஸ்டரா செனெகா மட்டுமல்ல எந்தவொரு தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டாலும் சில ஒவ்வாமைகள் ஏற்படும். எக்ஸ்டரா செனாகா தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களுக்கு இரத்த உறைவு ஏற்பட்டுள்ள சம்பவங்கள் பல நாடுகளில் இடம்பெற்றுள்ளன. இலங்கையிலும் அவ்வாறு சந்தர்ப்பங்கள் ஏற்பட்டிருந்தன. அதில் மூன்று பேர் மரணமடைந்துள்ளனர்.

உலக சுகாதார ஸ்தானத்தின் பக்க விளைவுகள் தொடர்பிலான குழுவின் அறிக்கையின் பிரகாரம் இரத்த உறைவு மற்றும் தடுப்பூசிக்கிடையில் தொடர்புகள் எவையும் கண்டறியப்படவில்லையென கூறப்பட்டுள்ளது. ஒரு மில்லியன் சனத்தொகையில் 04 முதல் 06 பேருக்கு இவ்வாறு ஒவ்வாமைகள் ஏற்பட்டுள்ளன. கொரோனா தொற்று நோயுடன் தொடர்பிலான காரணிகளுக்கும் இரத்தக் கசிவுக்கும் இடையிலான தொடர்பு மிகவும் குறைவாகும்.

எக்ஸ்டரா செனாகா தடுப்பூசியை தொடர்ந்து செலுத்திக்கொள்ள உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதியளித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் மருத்துச் சபையும் இதற்கு அனுமதியளித்துள்ளது என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Thu, 04/22/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை