கிழக்கு ஆளுநர் – மட்டு. முதல்வர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு

- சாணக்கியனின் கேள்விக்கு அமைச்சர் ஜனக பதில்

கிழக்கு மாகாண ஆளுநருக்கும் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வருக்குமிடையிலான பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படுமென அரசாங்க சேவைகள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தின் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பியான இரா.சாணக்கியன் கூற்றொன்றை முன்வைத்தார்.

''மட்டக்களப்பு மாநகரசபை முதல்வருக்கும் மட்டக்களப்பு மாநகர ஆணையாளருக்குமிடையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மாநகர முதல்வரின் நடவடிக்கைகளை ஆணையாளர் எதிர்க்கிறார். இந்தப்பிரச்சினையால் மாநகர சபை முதல்வர்

சொல்வதை செய்வதா அல்லது ஆணையாளர் சொல்வதை செய்வதா என்று தெரியாமல் ஊழியர்கள் குழம்பிப் போயுள்ளனர். எனவே இது தொடர்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பாகிய நாம் வழக்கொன்றை தாக்கல் செய்தோம். அதில் ஆணையாளருக்கு ஜூன் 12 ஆம் திகதி வரை இடைக்காலத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநருக்கும் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வருக்கும் இடையிலான ''ஈகோ'' பிரச்சினையாலேயே இது ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் நான் ஆலோசனைக்குழுக்கூட்டத்திலும் தெரியப்படுத்தி இருந்தேன் . எனவே இந்த பிரச்சினைக்கு நீங்கள் தீர்வு காண வேண்டும்'' என்றும் சாணக்கியன் எம்பி கூறினார். சாணக்கியன் எம்.பி. யின் இக் கூற்றுக்கு மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் பதிலளிக்கையில் , கிழக்கு மாகாண ஆளுநருக்கும் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வருக்குமிடையிலான ''ஈகோ'' பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும். இப்பிரச்சினையை உடனடியாக தீர்க்குமாறு அமைச்சு செயலருக்கு கூறியுள்ளேன் என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Sat, 04/10/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை