இறைபதம் எய்தினார் மன்னார் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை

இறைபதம் எய்தினார் மன்னார் ஓய்வுநிலை ஆயர் யோசேப்பு ஆண்டகை-Mannar Bishop Emeritus Bishop Rayappu Joseph Passed Away

- திங்கட்கிழமை நல்லடக்கம்
- அஞ்சலி செலுத்துவோர் இறுதிவரை காத்திருக்க வேண்டாம்
- மன்னார் மறைமாவட்ட மக்களுக்கு மட்டுமல்ல உலகத்தழிழருக்கும் பேரிழப்பு: மன்னார் ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ

மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் பேரருட்திரு இராயப்பு ஜோசப் ஆண்டகை தனது 81 ஆவது வயதில் இறைபதம் எய்தினார்.

யாழ்ப்பாணம் திருச்சிலுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை நித்திய இளைப்பாறினார்.

1992 ஆம் ஆண்டு முதல் மன்னார் மறைமாவட்ட இரண்டாம் ஆயராக பதவி வகித்து 2015 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் பூதவுடலுக்கான இறுதி அஞ்சலி திங்கட்கிழமை (05) இடம்பெறவுள்ளதுடன் இவருக்கு அஞ்சலி செலுத்த விரும்புவோர் இறுதி நேரம் வரை காத்திராது மன்னார் மறைமாவட்டத்தின் ஆயர் இல்ல சிற்றாலயத்தில் அல்லது மன்னார் பேராலயத்தில் பொது மக்களுக்களின் அஞ்சலிக்காக வைத்திருக்கும்போது அஞ்சலி செலுத்திக் கொள்ளும்படியும், சுகாதார நடைமுறைகளை கையாள வேண்டிய நிலை காணப்படுவதால் இறுதி நிகழ்வில் அனைவரும் கலந்து கொள்ள வாய்ப்பு ஏற்படாது என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தெரிவித்தார்.

கடந்த இரண்டு மாதங்களாக அவர் தொடர்ந்து நோய்க்கு உள்ளாகியிருந்தமையால் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கும் முகமாக யாழ்ப்பாணம் திருச்சிலுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையிலேயே இவர் இன்று (01) அமரத்துவம் அடைந்தார். இவரின் இறுதி கிரிகைகள் பின்வரும் ஒழுங்கின்படி மன்னார் மறைமாவட்டத்தின் அருட்பணியாளர்கள் ஆலோசனைக் குழுக்களின் தீர்மானத்தக்கு அமைவாக இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கமைவாக தற்பொழுது ஆயரின் உடல் யாழ் ஆயரின் சிற்றாலயத்தில் வைக்கப்பட்டு நாளை அதாவது வெள்ளிக் கிழமை (02) காலை 10.30 வரை அங்கு வைக்கப்பட்டு பின் அவரின் உடல் மன்னார் மறைமாவட்டத்துக்கு எடுத்துவரப்படும்.

பவனியாக மன்னாருக்கு கொண்டுவரப்படும் ஆயரின் பூதவுடல் மன்னார் மறைமாவட்டத்தின் ஆயரின் சிற்றாலயத்தில் பெரிய வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 2 மணி தொடக்கம் வைக்கப்படும்.

இந்நேரத்தில் பொது மக்கள் இங்கு வந்து அவரின் ஆன்மா இளைப்பாற்றிக்காக இறைவேண்டுதல் செய்வதுடன் அவருக்கு அஞ்சலி செலுத்தவும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக் கிழமை (04) மாலை 3 மணியளவில் மன்னார் ஆயரின் இல்லத்திலிருந்து பவனியாக மன்னார் மறைமாவட்டத்தின் பேராலயமான புனித செபஸ்தியார் பேராலயத்துக்கு ஆயரின் பூதவுடல் எடுத்துச் செல்லப்படும்.

இங்கு ஞாயிற்றுக் கிழமை (04) மாலை தொடக்கம் திங்கள் கிழமை (05) பிற்பகல் 2.00 மணி வரை மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும்.

பின் அன்று மாலை 3 மணியளவில் மன்னார் பேராலய வழிபாட்டு மண்டபத்தில் அனைத்து இலங்கை ஆயர்களுடன் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து மன்னார் பேராலயத்தில் இவரின் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

கொரோனா தொற்றுநோய் காரணமாக சுகாதார நடைமுறைகளுக்கு எற்ப இவ் சடங்குகளை முன்னெடுக்க வேண்டியிருப்பதால் கடைசிவரை காத்திராது அமரத்துவம் அடைந்துள்ள ஆயருக்கு அஞ்சலி செலுத்த விரும்புவோர் நேரகாலத்துடன் அதாவது ஆயரின் சிற்றாலயத்திலோ அல்லது பேராலயத்தில் பூதவுடல் வைக்கப்படடிருக்கும் நேரத்தில் வந்து அஞ்சலி செலுத்துவது சாலச் சிறந்தது..

ஏனென்றால் இறுதி நேரச் சடங்கின்போது சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்ப அதில் கலந்து கொள்வதற்கு அனைவருக்கும் சந்தர்ப்பம் கிடைக்காத நிலை ஏற்படும் என மன்னார் ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தனது ஊடக சந்திப்பின்போது இவ்வாறு தெரிவித்தார்.

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகையின் அனுதாபச் செய்தி
இதேவேளை, மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் மறைவு மன்னார் மறைமாவட்ட மக்களுக்கு மாத்திரமல்ல உலகத்தமிழருக்கும் ஒரு பேரிழப்பாகும் என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் தனது அறிக்கையில் தொடர்ந்து தெரிவித்திருப்பதாவது

மன்னார்  மறைமாவட்டத்தில் சுடர்விட்டுப் பிரகாசித்த ஒளிவிளக்கு இப்போது அணைந்துவிட்டது. உரிமைகள் மறுக்கப்பட்ட ஈழத்தமிழருக்காக ஓங்கி ஒலித்த குரல் இன்று அமைதியடைந்துவிட்டது. மனித உரிமைகளின் காவலராக விளங்கிய துணிவுமிக்க ஒரு தலைவர் இன்று நீங்காத துயில் கொண்டுவிட்டார்.

ஆம் எமது மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி காலை இறைபாதமடைந்தார். கடந்த பல மாதங்களாக நோய்வாய்ப்பட்ட நிலையில் இருந்த இவர் யாழ்ப்பாணம் திருச்சிலுவைக் கன்னியர்களின் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சில நாட்கள் மருத்தவ சிகிச்சைப்பெற்றுவந்த நிலையில் இந்த உலக ஓட்டத்தை நிறைவுசெய்து தன்னைப் படைத்த பரமனிடம் அடைக்கலம் புகுந்தார். அன்னாருக்கு எமது ஆழ்ந்த அஞ்சலிகளை சமர்பிக்கின்றோம். அவரது ஆன்மா அமைதியில் இளைப்பாறுவதாக.

ஒரு மறைமாவட்ட ஆயர் என்ற வகையில் தனது மறைமாவட்டப் பணிகளை செவ்வனே செய்த ஆயர் யோசேப்பு ஆண்டகை ஒரு கொடிய போர்காலத்தில் தமிழ் மண்ணில் மக்களின் பாதுகாப்பாகவும் அவர்களின் உரிமைகளுக்காகவும் துணிவோடு குரல் கொடுத்தார். தமிழ் தேசியத்தின்பால் ஆழமான பற்றுதிகொண்ட அவர் தமிழ் மக்கள் அனைத்து உரிமைகளோடும் பாதுகாப்போடும் இந்நாட்டில் வாழவேண்டும் என்பதற்காக அயராது பாடுபட்டார்.

யாழ்ப்பாண மறைமாவட்டக் குருவான இவர் 1992 ஆம் ஆண்டு மன்னார் மறைமாவட்ட ஆயராக அன்றைய திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரால் நியமனம் செய்யப்பட்டார். 25 வருடங்கள் மன்னார் மறைமாவட்டத்தின் ஆயராக அரும்பணி ஆற்றினார். கடந்த 2015 ஆம் ஆண்டு தனது 75 வது வயது நிறைவில் எதிர்பாராதவிதமாக திடீரென நோய்வாய்ப்பட்ட இவர் கடந்த 05 வருடங்களாக நோயின்பிடியில் வாழ்ந்து வந்தார்.

அன்னாரின் இழப்பு மன்னார் மறைமாவட்டத்திற்கும், உலகத்தமிழருக்கும் பேரிழப்பாகும். ஆவரின் மறைவால் துயருற்றுருக்கும் அனைவரோடும் நானும் செபத்தில் ஒன்றித்திருக்கின்றேன் என மன்னார் மறைமாவட்ட அயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை இவ்வாறு தனது அனுதாப செய்தியில் தெரிவித்துள்ளார்.

(தலைமன்னார் விஷேட நிருபர் வாஸ் கூஞ்ஞ, மன்னார் குறூப் நிருபர் -  எஸ்.றொசேரியன் லெம்பேட்)

Thu, 04/01/2021 - 14:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை