மக்களை அவதானமாக இருக்க அரசு அறிவுரை

சுகாதார தரப்பின் வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டுகோள்

நாட்டில் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கையில் கடந்த சில தினங்களாக அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதால் இத்தொற்றின் பரவுதலைத் தவிர்த்துக் கொள்வதில் ஒவ்வொருவரும் உச்சபட்ச கவனம் செலுத்த வேண்டும் என்று அரசாங்கமும் சுகாதாரத் தரப்பினரும் நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கொவிட் 19 தொற்று தவிர்ப்புக்கான சுகாதார வழிகாட்டுதல்களையும் ஆலோசனைகளையும் ஒழுங்குமுறையாகக் கடைபிடித்தொழுகும் போது இத்தொற்றின் பரவுதல் தொடரைத் துண்டித்துவிடலாம்.  அதனால் தற்போதைய சூழலில் அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த எதன் நிமித்தமும் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிலேயே இருப்பதில் ஒவ்வொருவரும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

'அடுத்துவரும் மூன்று வாரங்கள் மிகவும் முக்கியத்துவம் மிக்கதாக இருப்பதால் கொவிட் 19 தொற்றின் பரவுதலைத் தவிர்த்துக்கொள்வதற்கான அடிப்படை சுகாதார வழிகாட்டல்களாக விளங்கும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பேணுதல், கைகழுவுதல் உள்ளிட்ட அடிப்படை சுகாதாரப் பழக்கவழக்கங்களை உச்சளவில் பின்பற்றி மக்கள் பொறுப்புடனும் முன்னவதானத்துடனும் நடந்து கொள்ள வேண்டும்' என சுகாதார அமைச்சின் தொற்று நோய்கள் தடுப்பு பிரிவின் பிரதம தொற்று நோயியல் நிபுணர் டொக்டர் சுதத் சமரவீர வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொவிட் 19 தொற்றின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு அதன் பரவுதலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. என்றாலும் இது ஆளுக்காள் தொற்றி பரவும் ஒரு நோயாக இருப்பதால் இதன் பரவுதலைக் கட்டுப்படுத்துவதற்கு பெதுமக்களின் ஒத்துழைப்பு இன்றியமையாததாகும்.

இத்தொற்றின் முதலிரு அலைகளையும் சுகாதார மற்றும் பாதுகாப்பு தரப்பினரின் அர்ப்பணிப்பு மிக்க பணிகள் ஊடாக அரசாங்கம் ஏற்கனவே பெரு வீழ்ச்சி நிலைக்கு கொண்டு வந்தது. என்றாலும் தற்போது பரவும் திரிபடைந்த கொவிட் 19 தொற்றானது காற்றின் மூலம் பரவக்கூடியதாக விளங்குவதால் மக்கள் முன்பை விடவும் அதிக முன்னெச்சரிக்கையோடும் அவதானத்துடனும் செயற்பட வேண்டும்.

குறிப்பாக 'மூடிய அறைகள் மற்றும் அவ்வாறான இடங்களில் பணியாற்றுபவர்கள் தொடராக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்' என்று சுட்டிக்காட்டியுள்ள ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவ பேராசிரியர் நிலீக்கா மாலவிகே தற்போது பரவும் இத்தொற்றுக்கு இளம் வயதினர் அதிகளவில் உள்ளாவதாவும் கூறியுள்ளார்.

இத்தொற்றுக்குள்ளாகி தீவிர சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சை பெற அனுமதிக்கப்படுகின்றவர்களின் எண்ணிக்கையும் ஒட்சிசன் தேவையுடையோரின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கின்றது என்று சுகாதார தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதன் காரணத்தினால் கொவிட் 19 தொற்றின் தற்போதைய நிலமைகளைக் கருத்தில் கொண்டு நாட்டு மக்கள் பொறுப்புடனும் முன்னவதானத்துடனும் செயற்படுவது இன்றியமையாதது எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

(மர்லின் மரிக்கார்)

Tue, 04/27/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை