கிழக்கில் அதிகரித்த உஷ்ணம்; பழங்களின் விற்பனை அதிகரிப்பு

கிழக்கில் அதிகரித்த உஷ்ணம்; பழங்களின் விற்பனை அதிகரிப்பு-High Temperature-High Price for Fruits

கிழக்கில் தற்பொழுது நிலவும் அதிகரித்த உஷ்ண காலநிலை காரணமாக பொதுமக்கள் அதிகம் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

மக்கள் தங்களது அன்றாடத் தேவைகளை காலை வேளையிலயே நிறைவு செய்து கொண்டு வீட்டில் முடங்கி விடும் நிலை காணப்படுகின்றது.

உஷ்ணத்தைத் தணிப்பதற்காக மக்கள் நீராகாரப் பானங்கள், பழ வகைகளில் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றனர். இதன் காரணமாக, கிழக்குப் பிரதேசங்களில் பழ வகைகளின் விற்பனை கணிசமானளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தினசரி வெளி மாவட்டங்களிலிருந்து தோடம்பழம், தார்ப்பூசணி, வெள்ளரி, பப்பாசிப்பழம், மங்குஸ்தான், வாழைப்பழம், அன்னாசி, மாம்பழம் உள்ளிட்ட பழங்கள் அம்பாறை மாவட்டத்திற்கு பெருமளவில் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

தமிழ் - சிங்கள சித்திரைப் புத்தாண்டை காரணங் காட்டியும், தற்போதைய உஷ்ணக் காலநிலையை சாதகமாகப் பயன்படுத்தியும் பழ வியாபாரிகள் அதிகரித்த விலையில் பழங்களை விற்பனை செய்வதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அம்பாறை மாவட்டத்திற்கு தினசரி கொண்டு வரப்படும் பழவகைகள்  கடைகளிலும், பிரதான வீதியோரங்களிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

பெரும்பான்மையின பழ வியாபாரிகளுடன், பிரதேச வியாபாரிகளும் இணைந்து விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களிலுள்ள சில வர்த்தக நிலையங்களில் மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற பழுதடைந்த பழங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கவலை தெரிவிக்கப்படுகின்றது.

இதுதொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் கவனம் செலுத்த வேண்டும் எனக் கோரப்படுகின்றது.

இதேவேளை, குளிர்பானம், நீராகாரப் பானங்களை விற்பனை செய்யும் வியாபார நிலையங்களும் நாளுக்கு நாள் பிரதேச ரீதியாக அதிகரித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

(அட்டாளைச்சேனை மத்திய நிருபர் - ஐ.எல்.எம். மொஹமட் றிஷான்)

Thu, 04/15/2021 - 12:36


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை