Header Ads

பலஸ்தீனர்களுக்கான உதவியை மீண்டும் அளிக்கிறது அமெரிக்கா

பலஸ்தீன அகதிகளுக்கு உதவும் ஐக்கிய நாடுகள் சபை நிறுவனத்திற்கான நிதியுதவியை மீண்டும் வழங்கும் திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் அறிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தில் 2018 ஆம் ஆண்டு இந்த நிதியை அமெரிக்கா நிறுத்தியதால் அந்த நிறுவனம் பெரும் நிதிப் பற்றாக்குறைக்கு முகம்கொடுத்தது.

ஐ.நா நிவாரண மற்றும் பணிகள் நிறுவனத்திற்கு மனிதாபிமான உதவியாக 150 மில்லியன் டொலர் வழங்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது என்று அந்நாட்டு இராஜாங்கச் செயலாளர் அட்டோனி பிளிங்கன் கடந்த புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஐ.நா நிறுவனம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரை மற்றும் காசா, லெபனான் மற்றும் ஜோர்தானில் வசிக்கும் சுமார் 5.7 மில்லியன் பலஸ்தீன அகதிகளுக்கு சுகாதார சேவை மற்றும் கல்வி உட்பட உதவி மற்றும் ஏனைய சேவைகளை வழங்கி வருகிறது.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் காசாவுக்கான 75 மில்லியன் டொலர் பொருளாதார மற்றும் அபிவிருத்தி உதவி, அதேபோன்று அமைதியை கட்டியெழுப்புவதற்கான திட்டத்திற்கு 10 மில்லியன் டொலர்களை பலஸ்தீனர்களுக்கு வழங்குவதற்கும் திட்டமிட்டிருப்பதாக பிளிங்கன் தெரிவித்தார்.

கடந்த ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்ற பைடன் பலஸ்தீனர்களுடனான உறவில் முந்தைய ஜனாதிபதியில் இருந்து மாற்று போக்கை பின்பற்றப்போவதாக அறிவித்திருந்தார்.

Fri, 04/09/2021 - 11:40


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.