வெற்றிடங்களுக்கு முஸ்லிம்களை நிரப்ப ஏற்பாடு என விஷம பிரசாரம்

வெற்றிடங்களுக்கு முஸ்லிம்களை நிரப்ப ஏற்பாடு என விஷம பிரசாரம்-Sudden Death Inquirer Appointment Allegations-Ministry of Defence Denies

- போலி பிரசாரங்களுக்கு நீதியமைச்சு மறுப்பு தெரிவிப்பு

திடீர் மரண விசாரணை அதிகாரிகளுக்கு நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பம் கோரப்பட்டுள்ளமை தொடர்பில் சமூகத்தில் போலியான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் நீதி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

திடீர் மரண விசாரணை அதிகாரிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு கோரப்பட்டுள்ள விண்ணப்பங்கள் மூலம் முஸ்லிம்களை இணைத்துக்கொள்ள நீதி அமைச்சர் நடவடிக்கையெடுத்துள்ளதாக சமூகத்தில் போலி பிரசாரங்கள் கொண்டு செல்லப்படுகின்றன.

திடீர் மரண விசாரணை அதிகாரிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்காக நீதி அமைச்சர் எந்தவொரு அறிவித்தலையும் அல்லது விண்ணப்பம் கோரலையும் செய்யவில்லை. வழமையாக இடம்பெறும் நடைமுறைகளின் பிரகாரமே இந்த விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

வெற்றிடங்கள் நிலவும் பகுதிகளுக்கு புதிய திடீர் மரண விசாரணை அதிகாரிகளை நியமிப்பதற்காக இவ்வளவு காலம் பின்பற்றப்பட்டு வந்த நடைமுறையின் பிரகாரமே தற்போதும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. முஸ்லிம்களின் சடலங்கள் 24 மணி நேரத்துக்குள் அடக்கம் செய்ய வேண்டிய சூழலில், கடமை நேரத்துக்குப் பின்னர் திடீர் மரண விசாரணை அதிகாரிகளை அணுக முடியாத நிலைமை காரணமாக பிரச்சினை எழுந்துள்ளமை தொடர்பில் 2018ஆம் ஆண்டு அப்போதைய நீதி அமைச்சரால் நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் தலைமையில் நியமிக்கப்பட்ட குழு பரிந்துரைத்தது. இந்தக் குழுவால் அடையாளம் காணப்பட்ட 88 பொதுவான இடங்களில் இன ரீதியாக திடீர் மரண விசாரணை அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கையெடுக்க வேண்டுமெனவும் பரிந்துரைக்கப்பட்டது.

ஆகவே, தற்போது பின்பற்றப்படும் நடைமுறைகளுக்கமையவே வெற்றிடங்களுக்கான நியமனங்கள் வழங்கப்படுவதாக நீதி அமைச்சு நேற்றைய அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

Sun, 04/04/2021 - 07:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை