இலங்கை சட்டத்தின் கீழேயே கொழும்பு துறைமுக நகரமும்

எமது கட்டுப்பாட்டிற்கு அப்பால் என்பது அப்பட்டமான பொய்

நாட்டின் அபிவிருத்தி முன்னெடுப்புகளில் இடையூறு செய்து நாட்டை பின்னோக்கி தள்ளும் தீய சக்திகளுக்கு ஏமாறக் கூடாது என்கிறார் நீதியமைச்சர் அலி சப்ரி

கொழும்பு துறைமுக நகரில் முழுமையாக எமது நாட்டு சட்டமே செயற்படுத்தப்படும். இந்த நகரம் எமது கட்டுப்பாட்டிற்கு அப்பால் இருப்பதாக தெரிவிப்பதில் எந்த உண்மையும் கிடையாது என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். துறைமுக நகருடன் தொடர்புள்ள முழுமையான பொறிமுறையை நிர்வகிப்பதற்கே துறைமுக நகர ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படுவதாக தெரிவித்த அவர்,

நாட்டின் அபிவிருத்திக்கான முன்னெடுப்புகள் மேற்கொள்கையில் அதற்கு இடையூறு செய்து நாட்டை பின்னோக்கி தள்ளும் சதிகளுக்கு நாம் ஏமாறக் கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பு துறைமுக நகரம் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிக்கும் ஸூம் ஊடக மாநாடு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.

இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுவின் கீழே இந்த நகரம் நிர்வகிக்கப்படும் எனவும் ஆளுநரின் கீழ் மாகாண சபை நிர்வகிக்கப்படுவது போன்ற முறையே இங்கும் இருக்கும் என்றும் அவர் கூறினார்.சீன கம்பனி மட்டுமன்றி எவரும் இங்கு முதலீடு செய்ய முடியும் என்று கூறிய அவர், பல நாடுகள் இவ்வாறான நகரங்களை உருவாக்கி பொருளாதார வளர்ச்சி கண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் தெரிவித்த அவர்,

அனைத்து நாடுகளும் முதலீடுகளை ஈர்க்க பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொள்கின்றன. முதலீடு இன்றி முன்னேறிச் செல்ல முடியாது.சர்வதேச முதலீட்டாளர்கள் தான் துறைமுக நகரில் இங்கு முதலிட இருக்கிறார்கள். ஒவ்வொரு ஆட்சிக்காலங்களிலும் முதலீடுகளை பெற வேறுபட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.1978 இல் பாரிய கொழும்பு பொருளாதார ஆணைக்குழு வை ஐ.தே.க அரசு ஸ்தாபித்தது.இதனுடன் தொழில் பேட்டைகள் நாடுபூராவும் உருவாகின.ஆடைத்தொழிற்சாலைகளினூடாக அதிக வருமானம் கிடைத்து வருகிறது.

விசேட பொருளாதார வலயங்கள் இன்று நேற்று உருவாக்கப்பட்டவையல்ல.பல உலக நாடுகள் இவ்வாறான வலயங்களை ஆரம்பித்துள்ளன.

டுபாய் , இந்தியாவின் குஷ்ராத் தென்கொரியாவின் சொன்டோர் ,மலேசியா லபுவான் என்பவற்றில் அமைக்கப்பட்டுள்ள நகரங்கள் எமக்கு போட்டியாக இருக்கும் வலயங்களாகும். உலகிலுள்ள முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கும் உகந்த நாடாக எம்மை மாற்றிக் கொள்ளவேண்டும். உலகில் முதலிட சிறந்த நாடுகள் பட்டியிலில் 99 ஆவது இடத்திலே எமது நாடு இருக்கிறது. இந்த நிலையை மாற்றாவிடின் பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியாத நிலை ஏற்படும்.

முதலீட்டாளர்களுக்கு பல்வேறு இடங்களுக்கு சென்று அனுமதி பெறும் சிக்கலான நிலைமை இங்கு காணப்படுகிறது.துறைமுக நகர ஆணைக்குழு சட்டத்தை எதிர்ப்பவர்களின் நோக்கம் எமது நாட்டுக்கு வரும் முதலீடுகளை வேறு நாடுகளுக்கு திருப்புவதேயாகும்.

100 வீதம் அரசுக்கே சொந்தம்

இந்த முதலீட்டு வலயம் 269 ஹெக்டயார்களை கொண்டது.இதில் 91 ஹெக்டயார் பொது வசதிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.இவற்றை விற்க முடியாது.116 ஹெக்டயார் திட்ட கம்பனிக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த கம்பனி 1.4 பில்லியன் டொலர் முதலீடு செய்து துறைமுக நகரத்தை உருவாக்கியது.பிரதிபலனை எதிர்பார்த்துத் தான் முதலீட்டாளர்கள் முதலீடுகளை மேற்கொள்கின்றனர்.துறைமுக நகரில் 43 வீத பகுதியை குத்தகைக்கு வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளது.23 வீதமான பகுதி அரசுக்கு சொந்தமான பகுதியாகும். இருந்தாலும் மொத்த 100 வீதமான பகுதியும் அரசுக்கே சொந்தமானது.

நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு ஒப்படைப்பு

நிர்வாக மாவட்ட சட்டத்தின் கீழ் கொழும்பு மாவட்டத்தின் கீழ் துறைமுக நகரம் கொண்டுவரப்பட்டுள்ளது.இவை அனைத்தும் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. 2016 இல் முத்தரப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. மாநகர அமைச்சு, நகர அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் போர்ட்சிட்டி கம்பனியும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன. அதற்கமையவே இங்கு அபிவிருத்தி செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.அபிவிருத்து செயற்பாடுகள் ஒருவருடத்தினால் தாமதமானதால் குறித்த கம்பனிக்கு மேலதிகமான நிலப்பிரதேசம் வழங்க ​நேரிட்டுள்ளது.

துறைமுக நகரில் 43 வீதமான பிரதேசம் சீன கம்பனிக்கு 99 வருட குத்தகைக்கே வழங்கப்பட்டுள்ளது. 99 வருடங்களின் பின்னர் அதனை அவர்கள் மீள குத்தகை்கு வழங்குவதாக இருந்தாலும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதி தேவை.துறைமுக நகரம் எமது கட்டுப்பாட்டிற்கு அப்பால் இருப்பதாக தெரிவிப்பதில் எந்த உண்மையும் கிடையாது.

சீனா கம்பனிக்கு மாத்திரமே இங்கு முதலீடு செய்ய முடியும் என்பது பொய்யான குற்றச்சாட்டாகும். எவருக்கும் இங்கு முதலீடு செய்ய முடியும்.

முழுமையாக நாட்டு சட்டம் அமுல்

ஹொங்கொங்,சிங்கப்பூர்,மொனாக்கோ,லக்சம்போர்க்,கேமன் தீவு என பல நாடுகளில் இதே போன்றே செயற்பாடே இடம்பெறுகையில் இங்கு மாத்திரம் பொய்யான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.

இந்த துறைமுக நகரில் முழுமையாக எமது நாட்டு சட்டமே செயற்படுத்தப்படும்.குற்றவியல் சட்டம், பொதுவான சட்டங்கள், இருதரப்பிற்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பிணக்கின் போது நீதிமன்றம் செல்லாது தீர்ப்பதற்கான சட்டம்

என்பன அமுலில் இருக்கிறது.ஒப்பந்தத்துடன் தொடர்பற்ற பிரச்சினைகளை வாணிப நீதிமன்றத்திற்கும் சென்று தீர்க்க வாய்ப்புள்ளது.

ஆணைக்குழு உறுப்பினர்களை நியமிப்பதும் விலக்குவதும் ஜனாதிபதி

இதனுடன் தொடர்புள்ள முழுமையான பொறிமுறையை நிர்வகிப்பதற்கு துறைமுக நகர ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படுகிறது.இந்த ஆணைக்குழுவிற்கு 5-7 பேர்நியமிக்கப்படுவர்.இவர்களை எமது நாட்டு ஜனாதிபதி தான் நியமிக்கிறார்.விலக்கவும் அவருக்கு அதிகாரம் இருக்கிறது.ஆளுநர்கள்,நீதிபதிகள் போன்றோரை ஜனாதிபதி நியமிப்பது போன்றே இங்கும் நியமனம் வழங்கப்படும்.

இதில் அச்சமடைவதற்கு எதுவும் கிடையாது.இது கொண்டாடப்பட வேண்டிய விடயமாகும்.எமது நாட்டு அபிவிருத்தியின் திருப்புமுனையே இது. டுபாய்,ஹொங்கொங்,சிங்கப்பூர் போன்று எமக்கும் முன்னேற இந்த திட்டம் வாய்ப்பாக அமையும்.

அரசியலமைப்பிற்கு உட்பட்டதாக இருந்தால்.அவர்களுக்கு உரித்தான பகுதியை குத்தகைக்கு கொடுக்கவும் எமது அனுமதி பெற வேண்டுமாக இருந்தால், நாட்டின் பொதுவான சட்டமே இங்கு ம் செயற்படுவதாக இருந்தால் எமது நாட்டு நீதிமன்றங்களிலே பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றிருந்தால் அச்சமடைவதற்கு என்ன இருக்கிறது.நாட்டின் அபிவிருத்திக்கான முன்னெடுப்புகள் மேற்கொள்கையில் அதற்கு இடையூறு செய்து நாட்டை பின்னோக்கி தள்ளும் மறைகரங்கள் செயற்படுவதுண்டு .அதற்கு நாம் ஏமாறக் கூடாது.

ஒழுங்குவிதிகளுக்கு பாராளுமன்ற அனுமதி தேவை

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுவின் கீழே இந்த நகரம் நிர்வகிக்கப்படும் .ஆளுநரின் கீழ் மாகாண சபை நிர்வகிக்கப்படுவது போன்ற முறையே இங்கும் இருக்கும்.இங்கு ஈட்டப்படும் அனைத்துநிதியும் ஆணைக்குழு ஊடாக அரசின் ஒன்றிணைந்த நிதியத்திற்கு செல்லும்.கணக்காய்வு அறிக்கை வருடாந்தம் ஜனாதிபதிக்கு கையளிக்க வேண்டும். இந்த துறைமுக நகரில் செயற்படுத்தப்படும் ஒழுங்குவிதிகள் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு பாராளுமன்றத்தின் அனுமதி பெறப்பட வேண்டும்.பாராளுமன்ற அனுமதி கிடைக்காவிடின்அந்த ஒழுங்குவிதிகளை செயற்படுத்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த வீரசிங்க,டிலான் பெரேரா எம்.பி ஆகியோரும் கருத்து தெரிவித்தார்கள்.

ஷம்ஸ் பாஹிம்

 

 

Mon, 04/19/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை